பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை மத்திய அரசு கைவிட வேண்டும் ஏ.ஐ.டி.யூ.சி. கூட்டத்தில் வலியுறுத்தல்

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என திருவாரூரில் நடந்த ஏ.ஐ.டி.யூ.சி. கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2019-08-29 22:30 GMT
திருவாரூர்,

திருவாரூரில் ஏ.ஐ.டி.யூ.சி. சங்க நிர்வாகிகள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சந்திரசேகரஆசாத் முன்னிலை வகித்தார். நாகை செல்வராஜ் எம்.பி., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம், முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தொழிலாளர் நலச்சட்டங்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. இதனை உடனடியாக திரும்ப பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல், ரெயில்வே, பாதுகாப்புத்துறை உள்ளிட்டவைகளை தனியார் மயமாக்குவதை மத்திய அரசு கைவிட வேண்டும்.

மாநாடு

தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் போக்கை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களை வலியுறுத்தி அடுத்த மாதம் (செப்டம்பர்) 13, 14-ந்தேதிகளில் திருவாரூரில் மாபெரும் பேரணி பொதுக் கூட்டத்துடன் மாநாடு நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி, விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாஸ்கர், ஏ.ஐ.டி.யூ.சி. மாநில துணை தலைவர் புண்ணீஸ்வரன், கட்டிட தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கலைச்செல்வன், கட்சியின் ஒன்றிய செயலாளர் புலிகேசி, நகர செயலாளர் மாரியப்பன், சாலையோர பழக்கடை சங்க மாவட்ட செயலாளர் செல்வம், மீனவர் சங்க மாவட்ட செயலாளர் சின்னதம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்