சபாநாயகர் இருக்கை முன்பு தர்ணா: எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்
சட்டசபையில் சபாநாயகர் இருக்கை முன்பு தர்ணாவில் ஈடுபட்டதால் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
புதுச்சேரி,
புதுச்சேரி சட்டசபை நடவடிக்கைகளை சபாநாயகர் சிவக்கொழுந்து திருக்குறளை படித்து நேற்று தொடங்கிவைத்தார். தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்ய முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி அவர் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார்.
அப்போது அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் குறுக்கிட்டு, ‘சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளோம். அவர் பெருந்தன்மையுடன் சபாநாயகர் இருக்கையில் இருந்து வெளியேற வேண்டும். தார்மீக அடிப்படையில் அவர் சபாநாயகராக இருக்கும் தகுதியை இழந்துள்ளார்’ என்றார். அதற்கு சபாநாயகர் சிவக்கொழுந்து, ‘சட்டமன்ற விதிகளின் படி தான் சபை நடத்தப்படுகிறது’ என்றார். இதனையொட்டி அன்பழகனுக்கு, ஆதரவு தெரிவிக்கும் வகையில் அ.தி.மு.க., என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் ஒட்டு மொத்தமாக எழுந்து நின்று பேசினர். இதனால் அவர்கள் யாருக்கும் மைக் இணைப்பு வழங்கப்படவில்லை.
வெறுமையான பக்கத்துடன் கூடிய பட்ஜெட் புத்தகம் போன்ற ஒன்றை காட்டி அன்பழகன் பேசினார். தற்போது தாக்கல் செய்யப்படுவது பட்ஜெட் அல்ல. வெற்று அறிக்கை. ஏற்கனவே பட்ஜெட்டில் தாக்கல் செய்த திட்டங்கள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று கூறிக்கொண்டே சபாநாயகர் இருக்கை நோக்கி சென்றார்.
அவருடன் அ.தி.மு.க., என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சபாநாயகர் இருக்கையை நோக்கி சென்றனர். அங்கும் பட்ஜெட் போன்ற புத்தகத்தை காட்டி கடந்த 3 ஆண்டுகளாக தாக்கல் செய்த பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள் எதையும் நிறைவேற்றவில்லை என்று அன்பழகன் கூறினார்.
தொடர்ந்து சபாநாயகர் இருக்கை முன்பு அனைவரும் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அரசுக்கும், சபாநாயகருக்கும் எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இதற்கிடையே முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து பட்ஜெட் உரையை வாசித்துக்கொண்டு இருந்தார். எம்.எல்.ஏ.க்கள் தர்ணாவை தொடர்ந்து, சபாநாயகர் சிவக்கொழுந்து, சபை மாண்பை குலைக்கும் வகையில் உறுப்பினர்கள் செயல்படக்கூடாது. அவ்வாறு செயல்பட்டால் சபையை விட்டு வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
ஆனாலும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பியபடி இருந்தனர். இதனால் அவர்களை சபையை விட்டு வெளியேற்றும்படி சபை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். உடனே சபை காவலர்கள் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை வலுக்கட்டாயமாக சபையை விட்டு வெளியேற்றினர்.
அப்போது எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், பாஸ்கர், அசனா, வையாபுரி மணிகண்டன், என்.எஸ்.ஜே.ஜெயபால், திருமுருகன், டி.பி.ஆர். செல்வம், சந்திரபிரியங்கா, சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகிய 11 பேரும் வெளியேற்றப்பட்டனர். எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி, சுகுமாறன், கோபிகா ஆகிய 3 பேரும் நேற்று சபை நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லை. எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டதால் சபையில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் சிறிது நேரம் சபை நடந்த நிலையில் வெளியேற்றப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்காமல் சபையில் பங்கேற்கலாம் என்று அழைப்பு விடுத்தார். ஆனால் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் யாரும் சபைக்கு வராமல் சபாநாயகரின் அழைப்பை நிராகரித்தனர்.