நாராயண் ரானேயை பா.ஜனதாவில் சேர்த்தால் பாலில் உப்பை கலப்பதற்கு சமம் - மந்திரி தீபக் கேசர்கர் கருத்து
நாராயண் ரானேயை பா.ஜனதாவில் சேர்த்தால் பாலில் உப்பை கலப்பதற்கு சமம் என மந்திரி தீபக் கேசர்கர் கருத்து தெரிவித்து உள்ளார்.
மும்பை,
கொங்கன் மண்டலத்தில் மிகவும் சக்தி வாய்ந்த தலைவராக கருதப்படுபவர் நாராயண் ரானே. முன்னாள் முதல்-மந்திரியான அவர், உத்தவ் தாக்கரேயுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிவசேனாவில் இருந்து காங்கிரசில் சேர்ந்தார். பின்னர் கடந்த 2017-ம் ஆண்டில் காங்கிரசில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினார்.
பா.ஜனதா ஆதரவுடன் அவர் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். இந்தநிலையில், மராட்டிய சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் அவர் பா.ஜனதாவில் சேர உள்ளதாக பேசப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், நாராயண் ரானேவை பா.ஜனதாவில் சேர்த்தால் அது சுவையான பாலில் உப்பை சேர்ப்பதற்கு சமம் என சிவசேனா தலைவரும், மந்திரியுமான தீபக் கேசர்கர் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கும், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கும் இடையே நல்ல புரிதலுடன் கூடிய நட்பு உள்ளது. நாராயண் ரானேயை பா.ஜனதாவில் சேர்க்கும் முடிவை ஒரு போதும் முதல்-மந்திரி பட்னாவிஸ் எடுக்க மாட்டார் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.