ஓசூரில் இருந்து பிடித்து வரப்பட்ட குரோபர் யானை முதுமலை யானைக்கூட்டத்துடன் சேர்ந்தது
ஓசூரில் இருந்து பிடித்து வரப்பட்ட குரோபர் யானை முதுமலை யானைக்கூட்டத்துடன் சேர்ந்தது.
மசினகுடி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சூளகிரி பகுதியில் குரோபர் என பெயரிட்டு அழைக்கப்பட்ட 18 வயது ஆண் காட்டுயானை, 5 பேரை தாக்கி கொன்றது. அந்த காட்டுயானையை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து அந்த காட்டுயானையை வனத்துறையினர் வனகால்நடை டாக்டர் குழு மூலம் கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் லாரியில் ஏற்றி நீலகிரி மாவட்டம் முதுமலைக்கு கொண்டு வந்து இரவோடு, இரவாக வனப்பகுதியில் விட்டனர். இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முன்னதாக அந்த காட்டுயானையின் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தப்பட்டது. அதன் மூலம் தொடர்ந்து அந்த காட்டுயானையை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.
தற்போது அந்த குரோபர் யானை, முதுமலை வனப்பகுதியில் காட்டுயானை கூட்டத்துடன் சேர்ந்து மகிழ்ச்சியாக சுற்றித்திரிகிறது. மேலும் அதன் உடல் நிலையிலும் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கவுசல் கூறியதாவது:-
ஓசூரில் இருந்து பிடித்து வரப்பட்ட குரோபர் யானையின் உடல் நிலை நன்றாக உள்ளது. வனப்பகுதியில் இறக்கி விடப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் காட்டுயானைகள் கூட்டத்துடன் அந்த யானை சுற்றித்திரிந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.