ரிசர்வ் வங்கி உபரிநிதியை மத்திய அரசு பயன்படுத்துவது பிரச்சினை உருவாக்கும் - கனிமொழி எம்.பி. பேட்டி

“ரிசர்வ் வங்கியின் உபரிநிதியை மத்திய அரசு பயன்படுத்துவது பிரச்சினையை உருவாக்கும்“ என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

Update: 2019-08-28 22:45 GMT
தூத்துக்குடி, 

திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கனிமொழி எம்.பி. நேற்று காலை விமானம் மூலம் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவில் எந்தவித தொழில் வளர்ச்சியோ, வெளிநாட்டு முதலீடுகளோ இல்லாத நிலை உள்ளது. இந்திய பொருளாதாரத்தில் கடந்த 45 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு வீழ்ச்சியை பார்க்க முடிகிறது. வேலையில்லா திண்டாட்டம் மக்களை பாதித்து உள்ளது. இதனை சரி செய்ய மத்திய அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை. கடந்த முறை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது உலக அளவில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து கொண்டு இருந்த போதும், அப்போதைய மத்திய அரசு இந்திய பொருளாதாரத்தை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்தது. இதனால் இந்திய பொருளாதாரம் பாதுகாக்கப்பட்டது. தற்போது மத்திய அரசு எந்தவித வளர்ச்சி திட்டங்களையும் செயல்படுத்தாமல், தொலைநோக்கு பார்வை இல்லாமல் ஆட்சி செய்து வருகிறது.

ரிசர்வ் வங்கியின் உபரிநிதியை மத்திய அரசு பயன் படுத்த நினைப்பது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். ஏற்கனவே இதுபோன்று ரிசர்வ் வங்கியின் நிதியை பயன்படுத்திய சில நாடுகள் எந்த அளவுக்கு பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டு உள்ளது என்பதை பார்க்க முடிகிறது. ஆகையால், இந்திய ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை மத்திய அரசு பயன்படுத்துவது மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்தும்.

இந்திய அளவில் உள்ள பல பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வரும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பணிகளை பார்த்து பெருமைப்படுகிறேன். தமிழகத்தில் பல மாநாடுகளை நடத்தி ஒன்றும் செய்ய முடியாத முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டுக்கு சென்று என்ன செய்யப்போகிறார்? என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவ்வாறு கனிமொழி கூறினார்.

மேலும் செய்திகள்