தூத்துக்குடியில் ரவுடி வெட்டிக் கொலை: கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைப்பு
தூத்துக்குடியில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளிகளை பிடிக்க 4 போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று சிக்கிய ஒருவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.;
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாதாநகரை சேர்ந்தவர் வெள்ளப்பாண்டி. இவருடைய மகன் சரவணன் என்ற சிந்தா சரவணன் (வயது 36). தற்போது இவர் தூத்துக்குடி கே.வி.கே. நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். பிரபல ரவுடியான இவர் மீது 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் மீது பிரபல ரவுடியான பட்டுராஜை கொலை செய்த வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கே.வி.கே.நகரில் வீட்டில் இருந்த சரவணனை 5 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது.
சம்பவ இடத்துக்கு சென்ற மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்பாலகோபாலன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட ஒரு ஏ.டி.எம். கார்டை வைத்து குற்றவாளிகளை அடையாளம் கண்டறிந்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், சாயல்குடி கன்னிராஜபுரத்தில் நடந்த பட்டுராஜ் கொலைக்கு பழிக்கு பழியாக சரவணன் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இது குறித்து மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், நெல்லையை சேர்ந்த முனியசாமி(38), பாளையங்கோட்டை மேலக்குளம் நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்த பெருமாள் மகன் மகராஜன்(30), தாளமுத்துநகர் சண்முகபுரத்தை சேர்ந்த வாழ்வாங்கி மகன் வடிவேல்(40), முத்துகிருஷ்ணாபுரம் 6வது தெருவை சேர்ந்த ஜான்சன்(40) மற்றும் சிலர் மீது வழக்கு பதிவு செய்தார்.
இதை தொடர்ந்து கொலையாளிகளை பிடிப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் உத்தரவின் பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் நெல்லை மற்றும் பல்வேறு இடங்களுக்கு சென்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ஒருவரை தனிப்படை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.