கொல்லங்கோடு அருகே பயங்கரம், மீன் குழம்பு தகராறில் உளியால் குத்தி தந்தை கொலை - வாலிபர் கைது
மீன் குழம்பு தகராறில் உளியால் குத்தி தந்தை கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். இந்த பயங்கர கொலை பற்றிய விவரம் வருமாறு:-
கொல்லங்கோடு,
குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பாத்திமா நகரைச் சேர்ந்தவர் முருகன் (வயது 55), மரவேலை செய்யும் தொழிலாளி. இவர், உடலில் பலத்த காயத்துடன் திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மர வேலையில் ஈடுபட்டு இருந்த போது எதிர்பாராதவிதமாக மரத்தை துளையிடும் உளி குத்தி காயம் ஏற்பட்டதாக டாக்டர்களிடம் கூறினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் முருகன் பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்த கொல்லங்கோடு போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதன்பிறகு முருகன் சாவு தொடர்பாக அவர்களது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், முருகனை, அவருடைய மூத்த மகன் வினோத் (32) உளியால் குத்தி கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் வினோத்தை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:-
முருகனுக்கு ரமா என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் முடிந்து கணவருடன் வெளியூரில் வசித்து வருகிறார். மகன்கள் 2 பேருக்கும் திருமணம் ஆகவில்லை. முருகனின் மூத்த மகன் வினோத் கூலித் தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. தினமும் மது குடித்து விட்டு வந்து குடும்பத்தினரிடம் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.
இதற்கிடையே கடந்த 26-ந் தேதி இரவு வினோத் வீட்டிற்கு மீன் வாங்கி வந்துள்ளார். அப்போது, மீன் குழம்பு வைப்பதில் தாமதம் ஆனதாக தெரிகிறது.
இதுதொடர்பாக தனது தாயாருடன் வினோத் தகராறில் ஈடுபட்டார். இதனை முருகன் தட்டிக் கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த வினோத், மர வேலைக்காக வீட்டில் வைத்திருந்த உளியை எடுத்து முருகனை குத்தியது தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்தை கைது செய்தனர். மீன் குழம்பு வைப்பதில் ஏற்பட்ட தாமதம் தொடர்பான தகராறில் தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் கொல்லங்கோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.