ஓய்வூதிய திட்டத்தில் விவசாயிகள் சேர வேண்டும் - அதிகாரி வேண்டுகோள்

விவசாயிகள் ஓய்வூதிய திட்டத்தில் சேர வேண்டும் என்று அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2019-08-28 22:15 GMT
எஸ்.புதூர்,

எஸ்.புதூரில் விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம் குறித்த பயிற்சி கூட்டம் சமுதாய கூடத்தில் வேளாண்மை உதவி இயக்குனர் அம்சவேணி தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:- மத்திய அரசு அறிவித்துள்ள விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம் 18 முதல் 40 வயது வரை உள்ள சிறு, குறு விவசாயிகள் சேர்ந்து பயனடையலாம்.

விவசாயிகளின் வயதுக்கு ஏற்ப மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ.55 முதல் அதிகபட்சம் ரூ.200 வரை செலுத்தப்பட வேண்டும். இத்திட்டத்திற்கு விவசாயிகளின் 60 வயது வரை பணம் செலுத்த வேண்டும். விவசாயிகள் 61 வயது முதல் மாதந்தோறும் வாழ்நாள் முழுவதும் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியமாக கிடைக்கும். விவசாயிகள் 1, 3, 6 மாதங்கள், ஒரு வருடம் என தங்களின் வசதிக்கேற்ப வங்கி கணக்கு மூலம் பணம் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.

எதிர்பாராத விதமாக பணம் கட்டியவர் இறந்து போனால் வாரிசுதாரர் தொடர்ந்து மாதம் 1,500 ரூபாய் ஓய்வூதியமாக பெறலாம். மேலும் விவசாயிகள் 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த திட்டத்தில் தொடர விருப்பம் இல்லை என்றாலும் கட்டிய பணத்தை வட்டியுடன் திரும்ப பெறும் வசதி உள்ளது.

சிறு, குறு விவசாயிகள் தங்கள் பெயரில் நிலம் இருந்தாலும், 40 வயதை கடந்து விட்டது என்றால் தனது குடும்பத்தில் உள்ள மனைவி, மகன், மகள் என அவர்களது பெயரில் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு எஸ்.புதூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தையோ அல்லது பொது சேவை மையத்தையோ அணுகி பயன் பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்