சென்னை பாடியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் தப்பி ஓட்டம்

சென்னை பாடியில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து மர்மநபர்கள் 2 பேர் கொள்ளையடிக்க முயன்றனர். ஐதராபாத்தில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் இருந்தபடி, ஏ.டி.எம். மையத்தில் உள்ள எச்சரிக்கை அலாரத்தை ஒலிக்க செய்ததால் மர்மநபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

Update: 2019-08-28 22:45 GMT
பூந்தமல்லி,

சென்னை பாடி, முகப்பேர் சாலையில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று அதிகாலை ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்த 2 மர்மநபர்கள், ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றனர்.

ஐதராபாத்தில் செயல்பட்டுவரும் அந்த வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்தபடி, அந்த ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் இதை கண்காணித்த ஊழியர்கள், ஏ.டி.எம். மையத்தில் உள்ள எச்சரிக்கை அலாரத்தை ஒலிக்க செய்தனர்.

இதனால் பயந்துபோன மர்மநபர்கள், கொள்ளை முயற்சியை கைவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து கொரட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்ட போலீசார், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

அதேபோல் திருமுல்லைவாயல் செந்தில் நகர், ராஜாஜி சாலையில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று காலை வங்கியை திறக்க வந்த ஊழியர்கள், ஷட்டர் கதவு பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் கதவின் உள்புறம் உள்ள லாக்கரை அவர்களால் உடைக்க முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்று இருப்பது தெரிந்தது.

இதனால் வங்கியின் உள்ளே லாக்கரில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணம் தப்பியது. இதுகுறித்து வங்கியின் மேலாளர் ஜெயச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்மநபர்களின் உருவத்தை வைத்து அவர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்