மனைவியை பற்றி தரக்குறைவாக பேசியதால், ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் தற்கொலை

வேடசந்தூர் அருகே மனைவியை பற்றி தரக்குறைவாக பேசியதால் ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் தற்கொலை செய்துகொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டிய கட்டிட தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-08-28 23:00 GMT
வேடசந்தூர்,

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள கொன்னாம்பட்டியை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது40). இவர் நாகம்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர். இவருடைய மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த கட்டிட தொழிலாளியான முத்துக்குமார் (33)சண்முகவேலிடம் சென்று அவருடைய மனைவியை பற்றி தரக்குறைவாக கூறினார். இதுகுறித்து சண்முகவேல் தனது மனைவி மகேஸ்வரியிடம் கேட்டார். இதனால் வீட்டில் கணவன்-மனைவிக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து முத்துக்குமார் மீது கடந்த 13-ந்தேதி வட மதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மகேஸ்வரி புகார் கொடுத்தார். அதில் தன்னைப்பற்றி பேசி குடும்பத்தில் வீண் பிரச்சினை செய்து வரும் முத்துக்குமார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால் போலீசார் அந்த புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் நேற்று முன் தினம் மீண்டும் சண்முகவேலிடம், அவருடைய மனைவி பற்றி முத்துக்குமார் தரக் குறைவாக பேசினார். இதனால் மனமுடைந்த சண்முகவேல், அரளி விதை தின்று (விஷம்) மயங்கி விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சண்முகவேல் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் மகேஸ்வரி புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோசலைராமன் வழக்குப்பதிவு செய்து சண்முகவேலுவை தற்கொலைக்கு தூண்டிய முத்துக்குமாரை வலைவீசி தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்