வத்தலக்குண்டுவில், கடைகளின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
வத்தலக்குண்டுவில் அடுத்தடுத்து 2 கடைகளின் பூட்டுகளை உடைத்து ரூ.3 லட்சம் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வத்தலக்குண்டு,
வத்தலக்குண்டு-மதுரை நெடுஞ்சாலையில் சி.எஸ்.ஐ. தேவாலயம் அருகே தனியாருக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் பல்வேறு கடைகள் உள்ளன. அதில் வத்தலக் குண்டுவை சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவருக்கு சொந்தமான எலக்ட்ரிக்கல்ஸ் கடை உள்ளது. அந்த கடைக்கு அருகே பகவான் என்பவர் கட்டிட பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இருவரும் வியாபாரத்தை முடித்துவிட்டு கடைகளை பூட்டி விட்டு இரவு வீட்டுக்கு சென்றனர். இந்நிலையில் நேற்று காலையில் வணிக வளாகத்தில் உள்ள மற்ற கடை உரிமையாளர்கள் வந்து பார்த்தபோது, கார்த்திக்ராஜா, பகவான் ஆகியோரின் கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் இருந்தது. உடனே இதுகுறித்து அவர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அங்கு விரைந்து வந்தனர். வத்தலக்குண்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகுமரன், வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டியன் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் கடைகளுக்கு உள்ளே சென்று பார்த்தனர். அதில் கார்த்திக்ராஜாவின் கடையில் இருந்து ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்தையும், பகவான் கடையில் இருந்து ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது. பின்னர் கைரேகை நிபுணர் சீனியம்மாள் கடைகளில் பதிவான தடயங்களை சேகரித்தார்.
அந்த வணிக வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. மேலும் இரவு நேரத்தில் மின்விளக்குகள் எரிவதில்லை. இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் திட்டமிட்டு திருட்டு சம்பவத்தை அரங்கேற்றி இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அதே நேரத்தில் அந்த வணிக வளாகத்திற்கு எதிரே உள்ள ஒரு கடையில் கண்காணிப்பு கேமரா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் மர்ம நபர்களின் உருவம் பதிவாகி இருக்கிறதா? என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். வத்தலக்குண்டுவில் அடுத்தடுத்து 2 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு போன சம்பவம் பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது.