சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து - தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
கோவை மாநகராட்சியில் உயர்த்தப்பட்ட சொத்துவரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை,
கோவை மாநகராட்சியில் சொத்துவரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும், குடிநீர் வினியோகத்துக்கு வெளிநாட்டு நிறுவனமான சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நடந்தது.
மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சரும், சொத்து பாதுகாப்புக்குழு துணைத்தலைவருமான பொங்கலூர் பழனிசாமி, பொறுப்புக்குழு உறுப்பினர்கள் பி.நாச்சிமுத்து, நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். இதில் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. பேசும்போது கூறியதாவது:-
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடுகளுக்கு சொத்துவரி 50 சதவீதமும், குடியிருப்பு அல்லாத காலியிடங்களுக்கு 100 சதவீதமும் உயர்த்தப்பட்டு உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கவில்லை.
குறிப்பாக மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளான வடவள்ளி, குறிச்சி, சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர் மற்றும் கணபதி, ரத்தினபுரி உள்பட பல்வேறு பகுதிகளில் மாதத்துக்கு 2 முறைதான் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர கடந்த 2009-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட பாதாள சாக்கடை திட்டப்பணி முடிவடைந்த பின்னரும் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.
பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படாததால் குண்டும்-குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் பல்வேறு இடங்களில் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதுதவிர பல இடங்களில் தெருவிளக்குகள் சரியாக ஒளிருவது கிடையாது. இப்படி மாநகராட்சி பகுதியில் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்காமல் சொத்துவரியை மட்டும் 100 சதவீதம் உயர்த்தி இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அதுபோன்று குடிநீர் வினியோகம் மற்றும் பராமரிப்பு பணியையும் வெளிநாட்டை சேர்ந்த சூயஸ் நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து பல முறை போராட்டங்களும் நடத்தி உள்ளோம். ஆனால் மாநகராட்சி நிர்வாகம் இதுவரை கண்டுகொள்ளவில்லை.
எனவே உயர்த்தப்பட்ட சொத்துவரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், குடிநீர் தொடர்பாக வெளிநாட்டு நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இல்லை என்றால் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் பொதுமக்களை திரட்டி தொடர் போராட்டங்களை நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் வீரகோபால், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கோட்டை அப்பாஸ், துணை அமைப்பாளர் திருமலை ராஜா, பகுதி செயலாளர்கள் எஸ்.எம்.சாமி, கோவை லோகு மற்றும் வக்கீல் அருள்மொழி, மாணவர் அணி துணை அமைப்பாளர் வெங்கடேஷ், முருகவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.