குன்னூரில், சுகாதாரமற்ற 700 கிலோ மாட்டு இறைச்சி பறிமுதல் - உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

குன்னூரில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் சுகாதாரமற்ற 700 கிலோ மாட்டு இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-08-27 22:45 GMT
குன்னூர்,

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் தினசரி மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டில் ஆடு, மாடு, கோழி இறைச்சி கடைகள் அதிகளவில் உள்ளன.

இந்த நிலையில் இங்குள்ள மாட்டிறைச்சி வளாக கடைகளுக்குள் தொங்கவிடப்பட்டுள்ள இறைச்சியை எலிகள் கடித்து உண்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் தலைமையில், நகராட்சி சுகாதார அதிகாரி டாக்டர் ரகுநந்தன் உள்பட உணவு பாதுகாப்பு மற்றும் நகராட்சி அதிகாரிகள் கொண்ட குழுவினர் குன்னூர் நகராட்சி மார்க்கெட் பகுதியில் உள்ள கோழி மற்றும் மாட்டு இறைச்சி கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் சில இறைச்சி கடையில், சுகாதாரமற்ற முறையில் மாட்டு இறைச்சி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கடைக்குள் எலிகள், நாய்கள் உலா வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அங்கிருந்த 5 கடைகளில் இருந்து சுமார் 700 கிலோ மாட்டு இறைச்சியை அதிரடியாக பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 700 கிலோ இறைச்சியை நகராட்சி லாரிகளில் ஏற்றி சென்று, நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டது. இந்த சம்பவம் குன்னூரில் இறைச்சி பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்