அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து; விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கிருஷ்ணகிரி, ஓசூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2019-08-27 23:00 GMT
கிருஷ்ணகிரி,

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலையை உடைத்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் அண்ணா சிலை எதிரில் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் கனியமுதன் தலைமை தாங்கினார். கிருஷ்ணகிரி நகர செயலாளர் சரவணன் வரவேற்று பேசினார். மாவட்ட பொருளாளர் முனிராவ், மாவட்ட துணை தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல செயலாளர் நந்தன் கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் வேதாரண்யத்தில் அம்பேத்கரின் சிலையை உடைத்த நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன் அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலம் முழுவதும் தலைவர்களின் சிலைகளை வெண்கலத்தால் நிறுவ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைவர்களின் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். இதில் தொகுதி செயலாளர்கள் தியாகு, மன்னர்மன்னன், செம்பட்டி சிவா, நாடாளுமன்ற தொகுதி துணை செயலாளர் குபேந்திரன், மாநில நிர்வாகிகள் அசோகன், சரவணன், பெஞ்சமின் திருமாவேலன், மாநில மகளிர் அணி அமைப்பாளர் ஜெயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஓசூர் நகர செயலாளர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.

இதேபோல் ஓசூரில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓசூர் ரெயில் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சியின் தொகுதி செயலாளர் எச்.எம்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். தொண்டரணி அமைப்பாளர் சூரியவளவன் வரவேற்றார். மாநில அமைப்பு செயலாளர் கோவேந்தன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் நிர்வாகிகள் ராஜகோபால், குமார், முனியப்பா, மாயவன், வெங்கடேஷ், இளையராஜா, நாகராஜன், ராஜப்பா, வரதராஜன் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.

மேலும் செய்திகள்