புதையல் எடுத்து தருவதாக கூறி பெண்ணிடம் பணம் மோசடி; 3 போலி சாமியார்கள் கைது - ரூ.1¼ லட்சம், கார் பறிமுதல்

மத்தூர் அருகே புதையல் எடுத்து தருவதாக கூறி, பெண்ணிடம் பணம் மோசடி செய்த 3 போலி சாமியார்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.1¼ லட்சம் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-08-27 22:00 GMT
மத்தூர்,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள சின்னம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது24). இவர், கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் திப்பம்பட்டியை சேர்ந்த பரமசிவம் மனைவி பழனியம்மாள் என்பவரிடம், உங்களது நிலத்தில் புதையல் உள்ளது. ரூ.1 லட்சம் கொடுத்தால் புதையலை எடுத்து தருவதாக கூறினார். புதையலுக்காக, பழனியம்மாள் ரூ.98 ஆயிரத்தை சுரேசிடம் கொடுத்துள்ளார்.

ஆனால் பல நாட்களாகியும் சுரேஷ் புதையலை எடுத்து கொடுக்கவில்லை. இதனால் பழனியம்மாள் சுரேசை தொடர்பு கொண்டு மீண்டும் பணம் தருவதாகவும், புதையலை எடுத்து தருமாறும் கூறினார். இதையடுத்து கடந்த 25-ந் தேதி இரவு சுரேஷ், தனது நண்பர்களான சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த சிவா(33), தர்மபுரி மாவட்டம் செங்குட்டை பகுதியை சேர்ந்த செந்தில்குமார் ஆகியோருடன் திப்பம்பட்டி கிராமத்திற்கு காரில் வந்தார்.

அங்கு உறவினர்கள் உதவியுடன், 3 பேரையும் பிடித்த பழனியம்மாள், மத்தூர் போலீஸ் நிலையத்தில் அவர்களை ஒப்படைத்தார். மேலும் இந்த பண மோசடி குறித்து அவர் போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சுரேஷ், சிவா, செந்தில்குமார் ஆகிய 3 பேரும் போலி சாமியார்கள் என்பதும், பழனியம்மாளிடம் புதையல் எடுத்து தருவதாக கூறி பணம் மோசடி செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து சுரேஷ் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்