மாவட்டத்தில், 12 லட்சம் பனை கன்றுகள் நட இலக்கு - கலெக்டர் ஆசியா மரியம் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு 12 லட்சம் பனை கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை, பள்ளிபாளையம் மற்றும் கபிலர்மலை தவிர மற்ற 12 வட்டாரங்களில் இந்த ஆண்டில் நீடித்த நிலையான மானாவாரி மேம்பாட்டு இயக்க திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் சோளம், பச்சை பயறு மற்றும் நிலக்கடலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானிய விலையில் இடுபொருட்கள் வழங்கப்படுகின்றன. சோளத்திற்கு 2½ ஏக்கருக்கு ரூ.700-ம், பச்சைபயறு 2½ ஏக்கருக்கு ரூ.1,500-ம், நிலக்கடலை 2½ ஏக்கருக்கு ரூ.5,700-ம் இடுபொருட்கள் மானியமாக வழங்கப்படு கிறது.
மேலும் தமிழகத்தின் மாநில மரமான பனை மரத்தின் சாகுபடியை மேம்படுத்திட நாமக்கல் மாவட்டத்தில் 12 வட்டாரத்திற்கும் மொத்தம் 12 லட்சம் பனை கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தரமான பனங்கொட்டைகள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மானாவாரி பகுதியில் நிலத்தடி நீரை தக்க வைக்கவும், மண் அரிமானத்தை தடுக்கவும், மதிப்பு கூட்டும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பனை உணவு பொருள்களான பதநீர், கருப்பட்டி, பனஞ்சீனி, பனங்கற்கண்டு, பனங்கூழ் போன்றவற்்றை உற்பத்தி செய்து மானாவாரி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்திட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மேலும் வேளாண் துறையின் மூலம் மானிய விலையில் வினியோகம் செய்யப்பட உள்ள தரமான பனங்கொட்டைகளை பெற்று விதைப்பு செய்து விவசாயிகள் பயன் அடையலாம்.
தற்போது நிலவி வரும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் வேளாண்மைத்துறையின் மூலம் 6 மாத வயதுடைய 1 அடி உயரமுள்ள கட்டுமான உபயோக மரங்கள் 2½ ஏக்கருக்கு 5 என மானியத்தில்் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம், மண்ணின் ஈரப்பதம் பாதுகாக்கப்படுவதோடு மண் அரிப்பு போன்றவை தடுக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு விவசாயிகள் அந்தந்த பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.