சிலைகளை சேதப்படுத்தினாலும், அம்பேத்கர், பெரியாரின் கொள்கைகளை யாராலும் உடைக்க முடியாது - தொல்.திருமாவளவன் பேச்சு

சிலைகளை சேதப்படுத்தினாலும் அம்பேத்கர், பெரியாரின் கொள்கைகளை யாராலும் உடைக்க முடியாது என்று தொல்.திருமாவளவன் பேசினார்.

Update: 2019-08-27 22:45 GMT
சேலம், 

சேலம் கோட்டை மைதானத்தில் திராவிடர் கழகத்தின் பவள விழா மாநாடு நேற்று இரவு நடந்தது. இதில் விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசும் போது கூறியதாவது:-

சாதி ஒழிப்பு, சமூக நீதிக்கான குரல், இந்தி எதிர்ப்பு, இந்துத்துவா எதிர்ப்பு, சமஸ்கிருதம் எதிர்ப்பு, நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வு எதிர்ப்பு, மாநில சுயாட்சி அதிகாரம் பறிப்பு என வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் மட்டுமே குரல் எழுப்பட்டு வருகின்றன. அதற்கு அடித்தளம் இட்டவர் தந்தை பெரியார். தமிழகத்தில் சாதி ஒழிப்பு இன்னும் முற்றிலும் ஒழியவில்லை. சமத்துவம் மலரவில்லை.

இதனால் திராவிடர் கழகம், தி.மு.க.வின் அரசியல் அறியாமை என்று அர்த்தம் இல்லை. இன்றும் நாம் போராட வேண்டியுள்ளது. கடவுள் மறுப்பது என்பது கொள்கை அல்ல. அது போர் தந்திரம் ஆகும். பெரும்பான்மை சமுதாய மக்கள் மூட நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி, வேலை வாய்ப்பு, அதிகாரம் பெற வேண்டும் என்பதே தந்தை பெரியாரின் அடிப்படை நோக்கமாக இருந்தது. தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, மு.கருணாநிதி ஆகியோர் தமிழ் வளர்ச்சிக்காகவும், நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் கடுமையாக பாடுபட்டனர். அம்பேத்கர், பெரியார் சிலைகளை சிலர் சேதப்படுத்தலாம். இதன்மூலம் மதவாத சக்திகள் நம்மை பிரித்து விடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் பெரியார் மற்றும் அம்பேத்கரின் கொள்கைகள், கோட்பாடுகளை யாராலும் உடைக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசும்போது, சேலத்தில் 1944-ம் ஆண்டு ஆகஸ்டு 27-ந் தேதியில் முதன்முதலாக திராவிடர் இயக்கம் தொடங்கப்பட்டது. ஆனால் பெரியாரின் மறைவுக்கு பின் இந்த இயக்கம் காணாமல் போய்விடும் என்று நினைத்தார்கள். ஆனால் கி.வீரமணி தலைமை பொறுப்பை ஏற்று இன்றைக்கு பவள விழா காண்கிறது. அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழகத்தை காவியாக மாற்றிவிடலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். தமிழகத்தில் காவி ஒருபோதும் கரை சேராது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்தில் தாமரை கருகி போகுமே தவிர, என்றைக்கும் மலராது. சமூக நீதி, இட ஒதுக்கீட்டுக்காக தந்தை பெரியார் கடுமையாக போராடினார். இதனால் அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. தந்தை பெரியாரின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும், என்றார்.

முன்னதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசுகையில், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, காமராஜர், தோழர் ஜீவா உள்ளிட்ட தலைவர்கள் தமிழகத்தின் தன்மானத்தை தலைநிமிர செய்தவர்கள். மனிதனுக்கு எது அழகு தெரியுமா? என்று பெரியார் கூறினார். மானமும், அறிவும் தான் மனிதனுக்கு அழகு. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும் தான் 69 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. இதற்கு தந்தை பெரியாரே காரணம்.

ஆனால் தற்போது இட ஒதுக்கீடு, சமூக நீதி, இருமொழி கொள்கை உள்ளிட்ட பல்வேறு விஷங்களுக்கு தற்போது ஆபத்து வந்துள்ளது. மத்திய அரசு சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மாநில உரிமைகளை பறிக்கும் எந்த விஷயத்தையும் நாம் ஏற்க கூடாது. அதற்கு அனைவரும் இணைந்து போராட வேண்டும். பெரியார், அண்ணா, மு.கருணாநிதி ஆகிய தலைவர்களுக்கு பிறகு நம்மிடம் தற்போது மு.க.ஸ்டாலின் இருக்கிறார். அவருக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும், என்றார்.

மேலும் செய்திகள்