சேலத்தில் இருந்து கோவை வந்த போது, ஓடும் பஸ்சில் நகைப்பட்டறை ஊழியரிடம் 116 பவுன் நகை திருட்டு

சேலத்தில் இருந்து கோவைக்கு வந்த போது ஓடும் பஸ்சில் நகைப்பட்டறை ஊழியரிடம் 116 பவுன் நகையை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2019-08-27 22:30 GMT
பீளமேடு,

கோவை வெரைட்டிஹால் ரோட்டை சேர்ந்தவர் அபிநய் (வயது 41), நகைப்பட்டறை அதிபர். இவர், சேலம், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகைக்கடைகளுக்கு ஆர்டரின் பேரில் நகையை செய்து கொடுப்பது வழக்கம். அதன்படி, சேலம் மற்றும் அதை சுற்றி உள்ள நகைக்கடைகளில் இருந்து தங்க கட்டிகளை அபிநய் வாங்கி வந்தார். பின்னர் அவற்றை நகையாக செய்து அந்தந்த கடைகளுக்கு கொடுப்பதற்காக தனது பட்டறையில் ஊழியராக வேலை பார்க்கும் ரவிச்சந்திரன் (60) என்பவரை சேலத்துக்கு அனுப்பினார்.

அவரும் பட்டறையில் செய்த சங்கிலி, வளையல், கம்மல் உள்ளிட்ட நகைகளை ஒரு பையில் போட்டு சேலத்துக்கு கொண்டு சென்றார். பின்னர் அங்குள்ள கடைகளில் எடுத்த ஆர்டர்களின்படி நகையை கொடுத்தார். மீதம் இருந்த 116 பவுன் நகைப்பையுடன் சேலத்தில் இருந்து கோவைக்கு வரும் அரசு பஸ்சில் ஏறினார். அந்த பஸ் நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு கோவை பீளமேடு அருகே வந்தார்.

அப்போது, ரவிச்சந்திரன் வைத்திருந்த நகைப்பையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பஸ் முழுவதும் தேடினார். ஆனால் நகைப்பை கிடைக்கவில்லை. அப்போதுதான் மர்ம ஆசாமிகள் 116 பவுன் நகையை திருடி சென்றது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.32 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிச்சந்திரனிடம் நகையை திருடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

கோவையில் உள்ள நகைப்பட்டறைகளில் வேலை செய்பவர்கள் திடீரென்று நின்று விடுவார்கள். அவர்களுக்கு பட்டறையில் இருந்து நகையை எடுத்துச்செல்வது யார்? எங்கு கொண்டு செல்கிறார்கள் என்பது தெரியும். அவர்களிடம் ஆசை வார்த்தை கூறும் மர்ம நபர்கள், நகையை திருடுவதற்கு உடந்தையாக மாற்றிவிடுகிறார்கள். பின்னர் அவர்கள் திட்டமிட்டு பட்டறை ஊழியர்களிடம் எளிதாக நகையை திருடி விடுகிறார்கள். இதனால் கோவையில் அடிக்கடி நகை திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது.

தற்போது 116 பவுன் நகை திருடிய மர்ம ஆசாமிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். எனவே விரைவில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம். அதிகளவில் நகை கொண்டு செல்பவர்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்