வீட்டில் பதுக்கி வைத்த 405 கிலோ குட்கா பறிமுதல் கடைக்காரர் கைது

கோட்டூர்புரத்தில் வீட்டில் பதுக்கி வைத்த 405 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மளிகைக்கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-08-27 23:00 GMT
அடையாறு,

சென்னை கோட்டூர்புரம் சுற்று வட்டாரப்பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்களின் விற்பனை ரகசியமாக நடப்பதாக போலீசாருக்கு கிடைத்தது. அதன்பேரில், கோட்டூர்புரம் உதவி கமிஷனர் சுதர்சன் தலைமையில் தனிப்படை போலீசார் அந்த பகுதி முழுவதும் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, கோட்டூர்புரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள மளிகை கடை ஒன்றில் சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினர். அங்கு குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வதை கண்டுபிடித்தனர்.

மளிகைக்கடைக்காரர் கைது

இதையடுத்து, அந்த மளிகை கடையின் உரிமையாளரான கோட்டூர்புரம் நாயுடு தெருவை சேர்ந்த திருப்பதி ராஜா (வயது 36) என்பவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கர்நாடகாவில் இருந்து குட்கா பொருட்களை வாங்கி வந்து ஆழ்வார்பேட்டை 3-வது தெருவில் ஒரு வீட்டில் மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்தது தெரிய வந்தது.

இதையடுத்து, அங்கு சென்ற தனிப்படை போலீசார் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த 405 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். அதன்பின்னர், திருப்பதி ராஜாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்