நாகர்கோவிலில் சாலைகளை சீரமைக்க கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில் நகரில் சாலைகளை சீரமைக்க கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2019-08-27 23:00 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவிலில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க கோரி நகர தி.மு.க. இளைஞர் அணி சார்பில் ராமன்புதூர் சந்திப்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு நகர இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்த் தலைமை தாங்கினார். நகர செயலாளர் மகேஷ், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் சிவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

சிறை பிடிக்கும் போராட்டம்

அப்போது, அவர் “நாகர்கோவிலில் அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக உள்ளது. இதை சீரமைத்து தாருங்கள் என்று கோரி பல முறை மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தோம். எனினும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சாலைகளை சரிசெய்யுமாறு மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தோம். ஆனால் மாவட்ட நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை. மாநகராட்சி ஆணையர் வரியை உயர்த்துவதிலேயே அக்கறை காட்டுகிறார். மக்களிடம் வசூலிக்கும் வரி பணத்தை மக்கள் பணிக்காக செலவிட வேண்டும். ஆனால் அதை செய்யாமல் பணம் வசூலிப்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்துள்ளார். இதே நிலை நீடித்தால் மாநகராட்சி ஆணையரை சிறை பிடிக்கும் போராட்டம் நடத்துவோம்“ என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் இரா.பெர்னார்டு, லாரன்ஸ், தில்லைசெல்வம், பிரிட்டோசேம், தாமரைபாரதி, சாய்ராம், பெஞ்சமின், சுஜின் ஜெகேஷ், ஷேக்தாவுது, சந்திரசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்