வேலூர் கோர்ட்டில் வாலிபர் சரண், கன்டெய்னர் லாரி கடத்தல் வழக்கில் தேடப்பட்டவர்

கன்டெய்னர் லாரி கடத்தல் வழக்கில் தேடப்பட்ட வாலிபர் வேலூர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

Update: 2019-08-27 22:45 GMT
வேலூர்,

சென்னையை சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான கன்டெய்னர் லாரியில், தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த டிரைவர் துரை (வயது 41) என்பவர் சென்னையில் இருந்து எலக்ட்ரானிக் பொருட்களை ஏற்றிக்கொண்டு 21-ந் தேதி இரவு ஓசூரை நோக்கி ஓட்டிச் சென்றார். வேலூரை அடுத்த பூட்டுத்தாக்கு பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் அருகே வந்த கன்டெய்னர் லாரியை மடக்கிய 5 வாலிபர்கள், டிரைவர் துரையை தாக்கி விட்டு, கன்டெய்னர் லாரியை கடத்தி சென்றனர்.

இதுகுறித்து அவர், ரத்தினகிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். வேலூரை அடுத்த அப்துல்லாபுரம் அருகே சென்ற கன்டெய்னர் லாரியை போலீசார் மடக்கினர். கன்டெய்னர் லாரியை சேண்பாக்கத்தை சேர்ந்த ராம்குமார் (22), அசோக்குமார் (29), யாசின் (26), வேலூர் முத்துமண்டபம் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் (21), விருதம்பட்டு பகுதியை சேர்ந்த அன்பழகன் (24) ஆகியோர் கடத்தியது தெரிய வந்தது. அதில் யாசின் தப்பிச் சென்று விட்டார். இதையடுத்து ராம்குமார் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

தப்பிச்சென்ற யாசினை போலீசார் வலைவீசி தேடினர். அவர், நேற்று வேலூர் மாஜிஸ்திரேட்டு (ஜே.எம்-3) கோர்ட்டில் சரண் அடைந்தார். யாசினை, நீதிமன்ற காவலில் வைக்கவும், அவரை இன்று (புதன்கிழமை) ஆற்காடு கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் மாஜிஸ்திரேட்டு ராம்குமார் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்