கடற்கரை கிராமங்களில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும்: குறைதீர்க்கும் கூட்டத்தில் மீனவர்கள் வலியுறுத்தல்

கடற்கரை பகுதிகளில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் மீனவர்கள் வலியுறுத்தினர்.

Update: 2019-08-27 21:45 GMT
ராதாபுரம், 

ராதாபுரம் யூனியன் அலுவலகத்தில் தமிழக மீன்வளத்துறை மூலம் நெல்லை மாவட்ட கடற்கரை கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். கூட்டத்தில் கூட்டப்புளி, இடிந்தகரை, உவரி, கூட்டப்பனை உள்பட 10 கடற்கரை கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கலந்துகொண்டு, தங்கள் பகுதிகளில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும். தடுப்புச்சுவர் கட்ட வேண்டும். சாலை, அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கக்கூடாது என்ற கோரிக்கையையும் முன்வைத்தனர்.

பின்னர் கலெக்டர் ஷில்பா பேசியதாவது:-

கூடங்குளம் அணுமின் திட்ட சமூக மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.500 கோடி செலவில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக கடற்கரை கிராமங்களில் தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கன்னியாகுமரி மாவட்டம் பழையாற்றில் வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை மின்மோட்டார் மூலம் பம்பிங் செய்து ராதாபுரம் கால்வாய்க்கு கொண்டுவர ரூ.160 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த பணி அணுமின் திட்டம் மூலமாக அல்லது தமிழக அரசு மூலமாக விரைவில் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மீன்வளத்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

ராதாபுரம் தாலுகா உவரியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் சுயதொழில் பயிற்சி பெற்ற 70 பேருக்கு சான்றிதழ் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் கலெக்டர் ஷில்பா கலந்துகொண்டு, சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல முதுநிலை மேலாளர் ராமநாதன், முன்னோடி வங்கி மேலாளர் வெற்றிவேல், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் பழனி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்