பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்-அமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் பொதுமக்கள் மனு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்-அமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

Update: 2019-08-27 21:45 GMT
நெல்லை, 

விக்கிரமசிங்கபுரம் அருகே சிவந்திபுரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடந்தது. வனநில வரி திட்ட தனி தாசில்தார் செல்வகுமார், அலுவலக உதவியாளர் ஜெயபால், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், துணை வேளாண்மை அலுவலர் சண்முகசுந்தரம், கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர். முதியோர் உதவித்தொகை, குடியிருப்பு பட்டா மற்றும் சிவந்திபுரம் பஞ்சாயத்துக்கு குப்பை எடுக்க டிராக்டர் கேட்டு பல்வேறு மனுக்கள் பெறப்பட்டன. இதேபோன்று வாகைகுளம், ஈசானமடம் ஆகிய ஊர்களிலும் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடந்தது.

கடையநல்லூர் தாலுகா சாம்பவர் வடகரை கிராமத்தில் நடந்த முகாமில் பொதுமக்கள் அடிப்படை வசதிகள் கேட்டு மனுக்கள் கொடுத்தனர்.

செங்கோட்டை தாலுகா பண்பொழி பிர்க்காவில் உள்ள வடகரை, மேக்கரை, பண்பொழி, தேன்பொத்தை, கணக்கப்பிள்ளைவலசை, பெரியபிள்ளை வலசை ஆகிய கிராமங்களில் செங்கோட்டை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கங்கா, மண்டல துணை தாசில்தார் அரவிந்த், துணை தாசில்தார் ஞானசேகரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பூத்துரை, வட்டார புள்ளியியல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், துணை வேளாண்மை அலுவலர் சேக்மைதீன் ஆகியோர் கலந்துகொண்டு மனுக்களை பெற்றனர்.

திருவேங்கடம் நகரப்பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்த முகாமுக்கு, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். திருவேங்கடம், சங்குபட்டி, வெள்ளாகுளம், குறிஞ்சாக்குளம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து அடிப்படை வசதிகள், சாலை வசதிகள், தெருவிளக்குகள், மருத்துவம் மற்றும் சுகாதார வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் வாய்க்கால் வசதி, பசுமை வீடு கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. முகாமில் குருவிகுளம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்புராஜ், திருவேங்கடம் வருவாய் ஆய்வாளர் மஞ்சுளா, கிராம நிர்வாக அலுவலர் கருப்பசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்