தூத்துக்குடி மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு 157 மையங்களில் நடக்கிறது - கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 1-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) 157 தேர்வு மையங்களில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நடக்க உள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;-
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) குரூப்-4 பணிகளுக்கான தேர்வுகள் வருகிற 1-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்க உள்ளது. இதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் 45 ஆயிரத்து 308 பேர் விண்ணப்பித்து உள்ளனர். தூத்துக்குடி, எட்டயபுரம், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், விளாத்திகுளம் ஆகிய தாலுகாக்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
தூத்துக்குடி தாலுகாவில் 61 தேர்வு மையங்களும், எட்டயபுரத்தில் 6 தேர்வு மையங்களும், கோவில்பட்டியில் 36 தேர்வு மையங்களும், ஓட்டப்பிடாரத்தில் 6 தேர்வு மையங்களும், சாத்தான்குளத்தில் 9 தேர்வு மையங்களும், ஸ்ரீவைகுண்டத்தில் 8 தேர்வு மையங்களும், விளாத்திகுளத்தில் 11 தேர்வு மையங்களும், திருச்செந்தூரில் 20 தேர்வு மையங்களும் என மொத்தம் 157 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த தோ்வு பணிக்காக 28 கண்காணிப்பு குழுக்களும், கண்காணிப்பு பணிக்காக உதவி கலெக்டர் நிலையில் 17 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு உள்ளது. தேர்வர்கள் உரிய நேரத்தில் தேர்வு மையங்களுக்கு வர வேண்டும். செல்போன், கால்குலேட்டர் பொன்றவைகளை கொண்டு வரக்கூடாது. தேர்வு தொடங்கி 30 நிமிடங்களுக்கு பிறகு வரும் தேர்வர்கள், தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.