பழனி, நத்தம், அம்மையநாயக்கனூர் பகுதிகளில், சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் மனுக்கள் அளித்த பொதுமக்கள்
பழனி, நத்தம், அம்மையநாயக்கனூர் பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் ஏராளமான பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர்.
பழனி,
பழனியில், வருவாய்த்துறை சார்பில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடந்தது. சப்-கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்த முகாமிற்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். முகாமில் பழனி சப்-கலெக்டர் உமா, தாசில்தார் பழனிச்சாமி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த முகாமில் ரேஷன் கார்டு, பட்டா கோருதல், வீட்டுமனை, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை தொடர்பாக 30-க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். இந்த மனுக்களை பார்வையிட்ட கலெக்டர் அது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து 4 பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை வழங்கினார்.
பின்னர் நெய்க்காரப்பட்டி அருகே அ.கலையம்புத்தூர் ராஜவாய்க்காலில் ரூ.50 லட்சத்தில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
நத்தம் பேரூராட்சி சார்பில் மாரியம்மன் கோவில் அருகே உள்ள காவடி மடத்தில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடந்தது. இதற்கு தாசில்தார் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் சரவணக்குமார் முன்னிலை வகித்தார்.
இதில் குடிநீர், உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, சாலை பராமரிப்பு, தெருவிளக்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 120-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை பேரூராட்சி நிர்வாகம் செய்திருந்தது.
அம்மையநாயக்கனூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த சிறப்பு குறை தீர்க்கும் முகாமிற்கு நிலக்கோட்டை தாசில்தார் நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். நிலக்கோட்டை அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் யாகப்பன், அம்மையநாயக்கனூர் பேரூர் செயலாளர் தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அம்மையநாயக்கனூர் பேரூராட்சி செயல் அலுவலர் பூங்கொடி முருகு வரவேற்றார்.
இந்த முகாமில் பொதுமக்களிடம் இருந்து 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. இதேபோல் ஜம்புதுரைக்கோட்டை, மாலையகவுண்டன்பட்டி, குல்லலக்குண்டு, பள்ளபட்டி, ராமராஜபுரம் ஆகிய பகுதிகளில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடந்தது. இதில் முதியோர் உதவி தொகை, அடிப்படை வசதிகள் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக் கள் பெறப்பட்டன. முகாமில் நிலக்கோட்டை மண்டல துணை தாசில்தார் ருக்குமணி, ஒருத்தட்டு கிராம நிர்வாக அதிகாரி முத்துப்பாண்டி மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.