மானாமதுரை நான்கு வழிச்சாலையில் விதி மீறல்களால் விபத்துகள் அதிகரிப்பு - நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மானாமதுரை நான்கு வழிச்சாலையில் விதி மீறல்களால் விபத்துக்கள் அதிகரிப்பு, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2019-08-27 22:15 GMT
மானாமதுரை,

மதுரையில் இருந்து ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. நான்கு வழிச்சாலையில் விதிகளை பின்பற்றி சாலைகளை பாதசாரிகள் கடக்கும் பகுதி, வாகனங்கள் கடக்கும் பகுதி, குறுகிய வளைவு, பைபாஸ் ரோடு பிரியும் இடம், சேரும் இடம், நகருக்குள் நுழையும் இடம் என பல இடங்களில் எச்சரிக்கை பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன.

தானியங்கி சிக்னல்களும் பல இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் வாகனங்களில் செல்லும் பலரும் உரிய விதிகளை பின்பற்றாமல் செல்வதால் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு மானாமதுரையில் இருந்து செங்கல் சூளை தொழிலாளர்களை ஏற்றி சென்ற சரக்கு வேன் விதிகளை மீறி எதிர் திசையில் சென்றதால், அந்த வழியாக வந்த அரசு பஸ் மோதி 2 பேர் உயிரிழந்தனர், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

விதிகளை மீறி எதிர் திசையில் வாகனங்களை ஓட்டி வருவதால் தான் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. அதுபோன்ற நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்தாலே விபத்துகள் குறையும்.

எனவே போக்குவரத்து போலீசார் நான்கு வழிச்சாலையில் விதிகளை மீறி வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகள்