கூட்டுறவு கடன் சங்கங்களில் தரமற்ற இயற்கை உர பாக்கெட்டுகள், கடன் பெறும் விவசாயிகளை வாங்க நிர்ப்பந்திப்பதாக குற்றச்சாட்டு
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெறும் விவசாயிகளிடம் இயற்கை உரம் என்ற பெயரில் தரமற்ற உர பாக்கெட்டுகளை வாங்க நிர்ப்பந்திப்பதாக பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகள் புகார் கூறினர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் வில்சன்ராஜசேகர் முன்னிலை வகித்தார். இதில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்களிடமும், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளிடமும் மனுக்கள் பெறப்பட்டது.
வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை, விதவை பெண்களுக்கான உதவித்தொகை, சாதி சான்றிதழ் என பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி சுமார் 500-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை சம்பந்தபட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உடனடியாக அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார். மேலும் நிலுவையில் உள்ள மனுக்கள் மீதான விசாரணை குறித்தும் கேட்டறிந்தார்.
குறைதீர்வு நாள் கூட்டத்தில் திருவண்ணாமலை அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு கூட்டுக் குழு சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கக் கூடிய அனைத்து வேளாண்மை தொடக்க கூட்டுறவு கடன் சங்கம் மூலம் விவசாயிகள் பயிர்க் கடன் வழங்கும்போது உரத்துடன் இயற்கை உரம் என்ற பெயரில் பல வகையான பாக்கெட்டுகளை விவசாயிகளிடத்தில் திணிக்கின்றனர். இதை உபயோகித்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இது குறித்து வேளாண்மை துறையின் தரக்கட்டுப்பாட்டு அலுவலரை தொடர்பு கொண்ட போது இது குறித்தான தர ஆய்வோ அல்லது எங்களின் முன் அனுமதியோ இதுவரை பெறப்படவில்லை என்கிறார். எனவே தரமில்லாத, விருப்பமில்லாத இயற்கை உர பாக்கெட்டுகளை தடை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை அனைத்து டெங்கு கொசுப் புழு ஒழிப்பு களப் பணியாளர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் ஊதிய உயர்வு கேட்டு கடந்த சில மாதங்களாக மனு கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது எங்களுக்கு ஊதியமாக ரூ.280 வழங்கி வருகின்றனர். இந்த ஊதியமானது எங்கள் குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை.
மற்ற மாவட்டங்களில் ரூ.380 முதல் ரூ.450 வரை டெங்கு ஒழிப்பு பணியாளர்களுக்கு வழங்குகின்றனர். அதுபோல் திருவண்ணாமலை மாவட்ட டெங்கு கொசு புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு ரூ.380 முதல் 550 வரை தினக் கூலியாக வழங்குமாறும் மற்றும் தொகுப்பு ஊதியமாக வழங்குமாறும் கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பரிமளா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் லாவண்யா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.