சேலத்தில் வெவ்வேறு இடங்களில் மூதாட்டி உள்பட 2 பேர் தற்கொலை
சேலத்தில் வெவ்வேறு இடங்களில் மூதாட்டி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
சேலம்,
சேலம் வீராணம் அருகே உள்ள சுக்கம்பட்டி காந்திநகரை சேர்ந்தவர் சின்னப்பன். இவருடைய மனைவி லட்சுமி (வயது 65). இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தார். இருந்தபோதிலும் உடல்நிலை சரியாகாததால் லட்சுமி வாழ்க்கையில் விரக்தி அடைந்த நிலையில் காணப்பட்டார். இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு லட்சுமி விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக வீராணம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் லைன்மேடு பகுதியை சேர்ந்தவர் சிராஜூதீன் (40). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி பவுசிகா பானு. கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் கோபித்துக்கொண்டு பவுசிகா பானு கோவையில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் சிராஜூதீன் வீட்டில் விஷம் குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். பின்னர் அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிராஜூதீன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.