சுவரில் தலையை மோத செய்து காதலியை கொலை செய்த வாலிபர் கைது

ஜோகேஸ்வரியில் சுவரில் தலையை மோத செய்து காதலியை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2019-08-26 23:00 GMT
மும்பை,

மும்பை ஜோகேஸ்வரி மேற்கு, ஆனந்த் நகரை சேர்ந்த வாலிபர் நதீம்கான். இவரும், ஆயிஷா என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். சம்பவத்தன்று நதீம்கான், ஆயிசாவை தலையில் காயங்களுடன் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தார். அப்போது, ஆயிஷா கீழே தவறி விழுந்து தலையில் அடிபட்டதாக அவர் டாக்டர்களிடம் கூறினார். இதையடுத்து டாக்டர்கள் ஆயிஷாவை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

இந்தநிலையில் ஆயிஷா சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விபத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் ஆயிஷா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விபத்து வழக்கை, கொலை வழக்காக மாற்றி ஆயிஷாவின் காதலன் நதீம்கானை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, அவர் ஆயிஷாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

சம்பவத்தன்று ஆயிஷாவுக்கும், நதீம்கானுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த நதீம்கான், காதலி ஆயிஷாவின் தலையை பலமுறை சுவரில் வேகமாக மோத செய்து உள்ளார். இதில், படுகாயமடைந்த அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இதையடுத்து போலீசார் காதலியை கொலை செய்த நதீம்கானை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்