எலச்சிபாளையம் அருகே, கல்லூரி பஸ் மோதி பெண் சாவு
எலச்சிபாளையம் அருகே, கிரகபிரவேச அழைப்பிதழ் கொடுத்து விட்டு திரும்பியபோது மோட்டார் சைக்கிள் மீது கல்லூரி பஸ் மோதி, பெண் பரிதாபமாக இறந்தார்.
எலச்சிபாளையம்,
ஈரோடு கோட்டை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி, கூலித்தொழிலாளி. இவரது மனைவி மோகன செல்வி (வயது 32). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கிருஷ்ணசாமி புது வீடு கட்டியுள்ளார். இந்த வீட்டின் கிரகபிரவேசம் வருகிற செப்டம்பர் மாதம் 11-ந் தேதி நடைபெற இருந்தது.
இதையொட்டி கணவன், மனைவி இருவரும் உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க ராசிபுரம் சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பினர். எலச்சிபாளையம் கிளாப்பாளையம் அருகே இவர்களது மோட்டார் சைக்கிள் சென்றபோது, எளையாம்பாளையத்தில் இருந்து நாமகிரிப்பேட்டை நோக்கி சென்ற தனியார் கல்லூரி பஸ்சும், இவர்களது மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் மோகன செல்வி தூக்கி வீசப்பட்டு தலையில் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.இந்த விபத்து குறித்து எலச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கிரகபிரவேச அழைப்பிதழ் கொடுத்து விட்டு திரும்பியபோது மோட்டார் சைக்கிள் மீது கல்லூரி பஸ் மோதி, பெண் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.