நாமக்கல் குறைதீர்க்கும் கூட்டத்தில், ரூ.4½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்
நாமக்கல்லில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ரூ.4½ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு, மொத்தம் 433 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கினர்.
இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை உடனுக்குடன் வழங்கிட உத்தரவிட்டார்.
பரமத்திவேலூர் தாலுகா பில்லூர் கிராமத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது மனைவி தமிழரசிக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சத்திற்கான காசோலையினை கலெக்டர் வழங்கினார்.
மேலும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் விலையில்லா தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு ரூ.65 ஆயிரத்து 685 மதிப்பிலான விலையில்லா தையல் எந்திரங்களையும் கலெக்டர் வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.88 ஆயிரத்து 180 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 28 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 53 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) பாலசுப்பிரமணியன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் இலாஹிஜான், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன் உள்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.