ஓட்டப்பிடாரத்தில் மனைவியை கொன்ற மருந்தாளுனர் விஷம் குடித்து தற்கொலை

ஓட்டப்பிடாரத்தில் மனைவியை கொலை செய்த மருந்தாளுனர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-08-26 22:00 GMT
ஓட்டப்பிடாரம், 

ஓட்டப்பிடாரம் ரைஸ்மில் காலனியை சேர்ந்தவர் கடற்கரை. இவரின் மகன் செந்தூர்பாண்டியன் (வயது 55). இவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் மருந்தாளுனராக வேலை பார்த்து வந்தார். கடந்த 8.2.2019 அன்று கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில் செந்தூர்பாண்டியன் தனது மனைவியை கொலை செய்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு தூத்துக்குடி கோர்ட்டில் நடந்து வருகிறது.

ஜாமீனில் வெளியே வந்த செந்தூர்பாண்டியன் தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். தினமும் மது குடித்து விட்டு காலத்தை கழித்துள்ளார். நேற்று முன்தினம் மது குடிக்க சென்றவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இந்த நிலையில் நேற்று காலையில் முப்பிலிவெட்டி சுடுகாடு அருகே செந்தூர்பாண்டியன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் ஓட்டப்பிடாரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் அவரது உடலை போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக ஓட்டப்பிடாரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்