‘நான் எந்த கட்சியிலும் சேர மாட்டேன்’ நடிகர் சஞ்சய் தத் விளக்கம்

அரசியல் கட்சி ஒன்றில் சேரப்போவதாக கூறப்பட்ட நிலையில், தான் எந்த கட்சியிலும் இணைய மாட்டேன் என்று நடிகர் சஞ்சய் தத் மறுப்பு தெரிவித்து உள்ளார்.

Update: 2019-08-26 22:15 GMT
மும்பை,

மராட்டியத்தில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி அரசில் ராஷ்டிரீய சமாஜ் கட்சி அங்கம் வகிக்கிறது. இந்த நிலையில் அந்த கட்சியின் தலைவரும், மாநில கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை மந்திரியுமான மகாதேவ் ஜன்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “விரைவில் நடக்க உள்ள மராட்டிய சட்டமன்ற தேர்தலில் கூடுதல் இடங்கள் வழங்கும்படி பா.ஜனதாவிடம் கேட்கப்பட்டு உள்ளது.

மேலும் ராஷ்டிரிய சமாஜ் கட்சியை வலுப்படுத்துவதன் ஒரு பகுதியாக பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் அடுத்த மாதம் (செப்டம்பர்) 25-ம் தேதி எங்கள் கட்சியில் இணைவார்” என்று தெரிவித்தார்.

ஆனால் இந்த தகவலை சஞ்சய் தத் மறுத்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “நான் எந்த கட்சியிலும் சேர மாட்டேன். மகாதேவ் ஜன்கர் எனது அன்பு நண்பர் மற்றும் என்னுடைய சகோதரர் போன்றவர். அவரின் எதிர்கால முயற்சிகள் வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறி உள்ளார்.

2009-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் லக்னோ தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளராக நடிகர் சஞ்சய் தத் அறிவிக்கப்பட்டார். ஆனால் சட்டவிரோத ஆயுத சட்டத்தின் கீழ் சஞ்சய் தத் பெற்ற தண்டனையை நிறுத்தி வைக்க கோர்ட்டு மறுத்ததால் அவர் வேட்புமனுவை வாபஸ் பெற்றார்.

பின்னர் சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டபோதிலும் அதை ராஜினாமா செய்த சஞ்சய் தத் கட்சியில் இருந்தும் விலகினார். இந்த நிலையில் இவர் ராஷ்டிரீய சமாஜ் கட்சியில் இணைய இருப்பதாக கூறப்பட்ட தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சஞ்சய் தத்தின் தந்தையான மறைந்த நடிகர் சுனில் தத், வடமேற்கு மும்பை நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் எம்.பி.யாக 5 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். மேலும் அவர் மத்திய மந்திரியாகவும் பொறுப்பு வகித்துள்ளார். சஞ்சய் தத்தின் சகோதரி பிரியா தத்தும் எம்.பி. பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்