சொத்து பத்திரங்களை மீட்டுத்தர வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் கேனுடன் வந்த மூதாட்டியால் பரபரப்பு

சொத்து பத்திரங்களை மீட்டுத்தர வலியுறுத்தி நாகை கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் கேனுடன் வந்த மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-08-26 23:00 GMT
நாகப்பட்டினம்,

நாகை அருகே உள்ள நாகூர் தெற்கு மட விளாகத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மனைவி ருக்மணி (வயது 90). இவர் நேற்று தனது மகள் அனுராதா (46) என்பவருடன் நாகை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார்.

கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே வந்தவுடன் ருக்மணி தான் வைத்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்தார். இதனை அருகில் நின்ற தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்தி, டென்னிசன் மற்றும் போலீசார் அவர்களிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பறித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

பரபரப்பு

அப்போது ருக்மணி, எனது மகனிடம் உள்ள சொத்து பத்திரங்களை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுகுறித்து நாகூர் போலீசார் மற்றும் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் புகார் செய்துள்ளோம் என கூறினார். இதையடுத்து போலீசார் அவர்களுக்கு உரிய அறிவுரை கூறினர். தொடர்ந்து ருக்மணி கோரிக்கை அடங்கிய மனுவை கலெக்டர் சுரேஷ்குமாரிடம் கொடுத்து விட்டு சென்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்