வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை சேதம், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் - 95 பேர் கைது

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து மாவட்டம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 95 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-08-26 22:45 GMT
திண்டுக்கல்,

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஜீப் தீ வைத்து எரிக்கப்பட்டது. மேலும் அம்பேத்கரின் உருவ சிலையையும் ஒரு கும்பல் சேதப்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் அன்பரசு தலைமையிலான அந்த கட்சியினர் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், கடந்த ஓராண்டு காலமாக பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் சிலை சேதப்படுத்தப்படுகிறது. தற்போது வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தி உள்ளனர். இதுபோன்ற சம்பவம் நடைபெறாத வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் தலைவர்களின் சிலைக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

இந்த நிலையில் வேதாரண்யத்தில் சிலை சேதப்படுத்திய சம்பவத்தை கண்டித்து திண்டுக்கல் காமராஜர் சிலை அருகே, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் நிர்வாகிகள் பழனிச்சாமி, திருச்சித்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்தும், சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்யக்கோரியும் கோஷமிட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட அந்த கட்சியை சேர்ந்த 25 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பழனியில் பஸ்நிலைய ரவுண்டானா அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜான்சன் கிறிஸ்டோபர் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது, அம்பேத்கர் சிலையை உடைத்தவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். பின்னர் திடீரென்று அவர்கள் சாலையின் நடுப்பகுதிக்கு வந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பழனி டவுன் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளாக மாறியது. பின்னர் அனுமதியின்றி மறியல் செய்ததாக விடுதலை கட்சியினர் 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியதை கண்டித்து வத்தலக்குண்டு காளியம்மன் கோவில் அருகே மறியலில் ஈடுபட்ட மாநில நிர்வாகி நம்பி, ஒன்றிய செயலாளர் பாக்கியராஜ் உள்பட 30 பேரை வத்தலக்குண்டு போலீசார் கைது செய்தனர். இதேபோல் நிலக்கோட்டை நால்ரோடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் போதுராஜன் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்