வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து பெரம்பலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் ஆண்டிமடத்திலும் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2019-08-26 22:45 GMT
பெரம்பலூர்,

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. இதை கண்டித்து நேற்று காலை பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் முன்பு உள்ள சாலையில் திடீரென்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமையில், அக்கட்சியினர் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அம்பேத்கர் சிலையை உடைத்தவர்களை கைது செய்யக்கோரியும், சிலை உடைக்கப்பட்ட இடத்தில் அம்பேத்கருக்கு புதிய வெண்கல சிலை வைக்க கோரியும் கோஷமிட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மறியலை கைவிடவில்லையென்றால் கைது செய்யப்படுவீர்கள் என்று எச்சரித்தனர்.

ஆனாலும் அவர்கள் மறியலை கைவிடாமல் தொடர்ந்தனர். இதையடுத்து போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை சேர்ந்த 15 பேரை வலுக்கட்டாயமாக கைது செய்து வேனில் ஏற்றி அருகே உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதையடுத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

ஆர்ப்பாட்டம்

இதே போல் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் நான்கு ரோடு சந்திப்பில் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில், அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அக்கட்சியின் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி செயலாளர் இலக்கியதாசன் தலைமை தாங்கினார். அப்போது அம்பேத்கர் சிலையை உடைத்தவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த ஆண்டிமடம் போலீசார் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 26 பேரை கைது செய்து, அருகே உள்ள மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர்.

மேலும் செய்திகள்