அரசு கொடுத்த இடத்தில் வீடுகட்ட இடையூறு, மனவளர்ச்சி குன்றிய 3 பிள்ளைகளுடன் தம்பதி, கலெக்டரிடம் புகார்

அரசு கொடுத்த இடத்தில் வீடுகட்ட இடையூறு ஏற்பட்டுள்ளதாக, மனவளர்ச்சி குன்றிய 3 பிள்ளைகளுடன் தம்பதியினர் கலெக்டரிடம் புகார் செய்தனர்.

Update: 2019-08-26 22:15 GMT
தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி மக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் இதில் பங்கேற்று மனுக்கள் அளித்தனர்.

இக்கூட்டத்தில் மனு அளிக்க போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டி பத்ரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுருளிச்சாமி என்பவர் தனது மனைவி மகேஸ்வரி மற்றும் 3 பிள்ளைகளுடன் வந்தார். சுருளிச்சாமி-மகேஸ்வரி தம்பதிக்கு ராஜ்குமார் (வயது 22), சூர்யா (20) என்ற மகன்களும், ராதிகா (19) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் 3 பேரும் மனவளர்ச்சி குன்றியவர்கள்.

சுருளிச்சாமி தனது குடும்பத்துடன் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவிடம் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

என்னுடைய 3 பிள்ளைகளும் மனவளர்ச்சி குன்றியவர்கள். தமிழக அரசு போடி அம்மாபட்டி கிராமத்தில் எனது மனைவிக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கியது. குடியிருக்க வீடு இல்லாமல் மிகுந்த சிரமப்படுவதால், அரசு வழங்கிய இடத்தில் பசுமை வீடு கட்ட முயற்சித்தோம். அதற்கு சிலர் இடையூறு செய்கின்றனர். வீடு கட்ட விடாமல் ஆட்களை வைத்து மிரட்டி அச்சுறுத்துகின்றனர். இதுகுறித்து போடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். போலீஸ் அதிகாரிகள் பட்டா இடத்தில் வீடுகட்டிக் கொள்ள அறிவுறுத்தி அனுப்பினர். ஆனாலும், அந்த நபர்கள் வீடுகட்ட விடாமல் இடையூறு செய்கின்றனர். எனவே எங்களுக்கு பாதுகாப்பு வழங்கி சுதந்திரமாக வீடுகட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதுபோல், சின்னமனூர் உழவர்சந்தையில் கடை வைத்துள்ள விவசாயிகள் கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், ‘நாங்கள் 10 ஆண்டுகளாக அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு உழவர்சந்தையில் கடைகள் நடத்தி வருகிறோம். இங்கு கடைகள் நடத்தி வந்த சிலர் விதிமுறைக்கு கட்டுப்படாமல், சந்தையில் இருந்து வெளியேறினர். அவ்வாறு வெளியேறியவர்கள் சந்தைக்கு வெளியே ஆக்கிரமிப்பு செய்து கடைகள் அமைத்துள்ளனர். இதனால், சந்தைக்கு வரும் மக்கள் வாகனங்களை நிறுத்த இடமின்றி தவிக்கின்றனர். எனவே தற்காலிக ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

மேலும் செய்திகள்