ஓய்வூதியத்துக்கு ஆன்லைன் மூலம் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் - உதவி இயக்குனர் தகவல்

விவசாயிகள் ஓய்வூதிய திட்டத்தில் பயன் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.;

Update: 2019-08-26 22:30 GMT
சிவகங்கை,

கல்லல் வேளாண்மை உதவி இயக்குனர் பழ.கதிரேசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

 மத்திய அரசின் கிஸான் மந்தன் யோஜனா ஓய்வூதிய திட்டத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 60 வயதுக்கு பிறகு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது. 18 முதல் 40 வயது வரை உள்ள சிறு, குறு விவசாயிகள் மட்டுமே இந்த திட்டத்தில் சேர முடியும்.

இந்த திட்டத்தில் விவசாயிகள் மாதந்தோறும் ரூ.55 முதல் ரூ.200 வரை செலுத்த வேண்டும். முதலில் செலுத்தும் அதே தொகையினை 60 வயது வரை செலுத்த வேண்டும்.

இந்த தொகையை மாதா மாதம், அல்லது 3 மாதம், 6 மாதம், ஒரு வருடம் என விவசாயிகள் வசதிக்கேற்ப தங்கள் வங்கி கணக்கு மூலம் செலுத்தலாம். இவ்வாறு பணம் செலுத்தியவர்களுக்கு 61-வது வயது முதல் மாதந்தோறும் வாழ்நாள் முழுவதும் ரூ.3 ஆயிரம் பணம் ஓய்வூதியமாக கிடைக்கும்.

பணம் கட்டியவர் எதிர்பாராத விதமாக இறந்து போனால், அவரது வாரிசுதாரர்களுக்கு தொடர்ந்து மாதம் ரூ.1,500 ஓய்வூதியமாக கிடைக் கும். விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த திட்டத்தில் தொடர விருப்பம் இல்லை என்றால் கட்டிய பணத்தை வட்டியுடன் திரும்ப பெறும் வசதி உள்ளது.

சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்கள் பெயரில் நிலம் இருந்தாலும், 40 வயதை கடந்து விட்டது என்றால் தனது குடும்பத்தில் உள்ள மனைவி, மகன், மகள் ஆகியோரின் பெயரில் இந்த திட்டத்தில் இணையலாம்.

இதற்காக விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் அருகாமையில் உள்ள இ-சேவை மையம் மற்றும் வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி அங்கிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்