மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு நிலம் குத்தகை, ஆய்வுக்கு வந்த அதிகாரிகளை தடுத்து பொதுமக்கள் வாக்குவாதம்

மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு குத்தகைக்கு வழங்க நில ஆய்வுக்கு வந்த அதிகாரிகளை தடுத்து பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர்.

Update: 2019-08-25 21:30 GMT
கோத்தகிரி,


ஊட்டியில் குதிரை பந்தய மைதானம் உள்ளது. இந்த நிலம் வருவாய்த்துறைக்கு சொந்தமானது. அதனை குத்தகைக்கு எடுத்து மெட்ராஸ் ரேஸ் கிளப் குதிரை பந்தயம் நடத்தி வருகிறது. மேற்கண்ட குதிரை பந்தய மைதானத்தின் ஒரு பகுதியில் இருந்து சுமார் 1.6 ஏக்கர் நிலத்தை எடுத்து வாகன நிறுத்துமிடம் அமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதற்கு பதிலாக கோத்தகிரி அருகே கடைக்கம்பட்டி அல்லது ஜக்ககம்பையில் உள்ள வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை 11 மணிக்கு நீலகிரி மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா, குன்னூர் உதவி கலெக்டர் ரஞ்சித் சிங், கோத்தகிரி தாசில்தார் மோகனா, மெட்ராஸ் ரேஸ் கிளப் முதன்மை நிர்வாக அதிகாரி(சி.இ.ஓ.) ராமன், நிர்வாகி ஜெப்ரி ஆகியோர் கடைக்கம்பட்டியில் உள்ள வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆய்வு செய்ய சென்றனர். இதை அறிந்ததும் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து, கடைக்கம்பட்டிக்குள் அதிகாரிகளை செல்ல விடாமல் தடுத்தனர்.

மேலும் வருவாய்த்துறை நிலத்தை குத்தகைக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கடைக்கம்பட்டியில் கோவில், விளையாட்டு மைதானம், அரசு பள்ளி, சமுதாய கூடம், மயானம் ஆகியவை வருவாய்த்துறை நிலத்தில் உள்ளன. தற்போது அந்த நிலம் குத்தகைக்கு வழங்கப்பட்டால், நாங்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாவோம். எனவே அந்த முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதற்கு பதிலளித்த அதிகாரிகள் கூறும்போது, அந்த நிலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்யவே வந்து உள்ளோம். தற்போது நிலத்தை கையகப்படுத்தும் முடிவு எதுவும் எடுக்கவில்லை என்றனர். மேலும் இந்த நிலம் எங்களுக்கு ஏற்றதாக இல்லை என்று மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்க உள்ளோம் என மெட்ரோஸ் ரேஸ் கிளப் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் சமாதானம் அடைந்த பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் அதிகாரிகள் நிலத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்துவிட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்