சுப்ரியா சுலே கூட்டத்துக்கு வந்த 8 வாகனங்களுக்கு அபராதம் நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டதால் நடவடிக்கை
சுப்ரியா சுலே பிரசார கூட்டத்தில் பங்கேற்ற 8 வாகனங்களுக்கு நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டதாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை,
சுப்ரியா சுலே பிரசார கூட்டத்தில் பங்கேற்ற 8 வாகனங்களுக்கு நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டதாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சுப்ரியா சுலே பிரசாரம்
மராட்டியத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவன தலைவர் சரத்பவாரின் மகளும், எம்.பி.யுமான சுப்ரியா சுலேவும் பிரசாரத்தில் இறங்கியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை பிரசாரத்தை தொடங்கிய அவர் முதல்கட்டமாக அகமத்நகர், சோலாப்பூர், ஜல்காவ், நாசிக், தானே மற்றும் நவிமும்பை பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
இதன் ஒரு பகுதியாக சோலாப்பூர், துப்பரின் சவுக் பகுதியில் உள்ள இந்திய மருத்துவ கழக வளாகத்தில் நடத்த பிரசார கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியின்போது வளாகத்தின் வெளியே நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த 8 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வேண்டுமென்றே நடவடிக்கை...
இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
இந்த நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தபோது அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போக்குவரத்து போலீசார் வளாகத்தின் வெளியே நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களை அகற்றுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கூறப்பட்டது. பலமுறை எச்சரித்த போதும் வாகனங்கள் அகற்றப்படவில்லை எனவே அபராதம் விதிக்கப்பட்டது. இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சி பேரில் பதியப்பட்ட வாகனம் மற்றும் சுப்ரியா சுலே பொதுக்கூட்டதிற்கு வர பயன்படுத்திய வாகனமும் அடங்கும். இதில் எம்.பி.க்கு சொந்தமான வாகனங்களும் உள்ளதா என உறுதியாக தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆனால் தேசியவாத காங்கிரஸ் இளைஞர் பிரிவின் சில உறுப்பினர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு வேறு எந்த இடமும் இல்லை என்று கூறியதுடன், இந்த நடவடிக்கை காவல்துறையினரால் வேண்டுமென்றே எடுக்கப்பட்டது என்று குற்றம் சாட்டினார்.