நூதன முறையில் நகைக்கடை உரிமையாளரை ஏமாற்றி ரூ.2.40 லட்சம் நகைகளுடன் மாயமான வாலிபர் பிடிபட்டார்
நூதன முறையில் நகைக்கடை உரிமையாளரை ஏமாற்றி ரூ.2 லட்சத்து 39 ஆயிரம் நகைகளுடன் மாயமான வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
நூதன முறையில் நகைக்கடை உரிமையாளரை ஏமாற்றி ரூ.2 லட்சத்து 39 ஆயிரம் நகைகளுடன் மாயமான வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நகைகள்
தென்மும்பை மும்பாதேவி பகுதியில் உள்ள ஒரு நகைக்கடைக்கு கடந்த மாதம் வாலிபர் ஒருவர் நகைகள் வாங்க வந்திருந்தார். ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்திற்கு நகைகள் வாங்கிய அவர், கடை உரிமையாளரிடம் செல்போன் மூலமாக பணம் பரிமாற்றம் செய்வதாக கூறினார். முதற்கட்டமாக ஆயிரத்தை கடை உரிமையாளருக்கு அனுப்பினார்.
இதனை சோதனை செய்த கடை உரிமையாளர் பணம் வந்து இருப்பதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து மீதி பணத்தை சில நிமிடத்தில் அனுப்பி விடுவதாக கூறிய வாலிபர் நகைகளுடன் அங்கிருந்து சென்றுவிட்டார். ஆனால் வங்கிக்கணக்கில் பணம் வந்து உள்ளதா? என்பதை கடை உரிமையாளர் சோதனை செய்யாமல் இருந்துவிட்டார்.
வாலிபர் கைது
மறுநாள் வங்கிக்கணக்கை சரிபார்த்த போது ரூ.2 லட்சத்து 39 ஆயிரம் செலுத்தப்படாமல் இருந்தது தெரியவந்தது. நூதன முறையில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகைக்கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் வாலிபரின் அடையாளம் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில், அவரது பெயர் சுசாந்த் ராஜ்புத்(வயது25) என்பது தெரியவந்தது.
மேலும் திருடிய நகைகளை பாந்திராவில் உள்ள ஒரு நகைக்கடையில் விற்றுவிட்டதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.