திருச்செந்தூர் ஆவணித்திருவிழா: சுவாமி குமரவிடங்க பெருமான்- வள்ளி அம்பாளுக்கு மகா தீபாராதனை

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணித் திருவிழா 6-ம் திருநாளான நேற்று சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், வள்ளியம்பாளுக்கும் மகா தீபாராதனை நடைபெற்றது.

Update: 2019-08-25 22:00 GMT
திருச்செந்தூர், 

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணித் திருவிழா 6-ம் திருநாளான நேற்று சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், வள்ளியம்பாளுக்கும் மகா தீபாராதனை நடைபெற்றது. இன்று(திங்கட்கிழமை) சிவப்பு சாத்தி கோலத்தில் சுவாமி எழுந்தருள்கிறார்.

ஆவணித்திருவிழா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா காலங்களில் தினசரி சுவாமியும், அம்பாளும் காலை மற்றும் இரவில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகின்றனர். 6-ம் திருநாளான நேற்று மாலையில் கீழரதவீதியில் உள்ள திருவாவடுதுறை ஆதீனம் மண்டபத்தில் சுவாமி குமரவிடங்கப்பெருமானுக்கும், வள்ளி அம்பாளுக்கும் மற்றும் ஜெயந்திநாதருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில், திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக மூர்த்தி சுவாமிகள், ஆதீன பொது மேலாளர் சுப்பிரமணியன், திருச்செந்தூர் ஒருங்கிணைப்பாளர் முத்துகிருஷ்ணன், கண்காணிப்பாளர்கள் சுடலைமுத்து, கோமதிநாயகம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வெள்ளித்தேரில் வீதி உலா

இரவு சுவாமியும், அம்பாளும் மேலக்கோவிலுக்கு எழுந்தருளினர். பின்னர் சுவாமி குமரவிடங்கப்பெருமான் வெள்ளித்தேரிலும், வள்ளி அம்பாள் இந்திர வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.

இன்று சிவப்பு சாத்தி

7-ம் திருநாளான இன்று(திங்கள்கிழமை) நள்ளிரவு 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், 5 மணிக்கு சுவாமி சண்முகரின் உருகு சட்டசேவை நடக்கிறது. காலை 9 மணிக்கு சுவாமி சண்முகர் சண்முகவிலாச மண்டபத்தில் இருந்து வெட்டிவேர் சப்பரத்தில் பிள்ளையன் கட்டளை மண்டபத்திற்கு எழுந்தருள்கிறார். பின்னர் சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெறும். மாலை 4.30 மணிக்கு தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருள்கிறார்.

தேரோட்டம்

8-ம் திருநாளான நாளை(செவ்வாயக்கிழமை) அதிகாலையில் சுவாமி சண்முகர் பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்திலும், காலை 10.30 மணிக்கு பச்சை சாத்தி கோலத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்த பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். 10-ம் திருநாளான 29-ந் தேதி(வியாழக்கிழமை) காலை 5.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்