குமாரசாமி என்னை எதிரியாக மட்டும்தான் பார்த்தார் சித்தராமையா சாடல்

குமாரசாமி என்னை எதிரியாக மட்டும்தான் பார்த்தார் என்று சித்தராமையா கடுமையாக சாடி பேசியுள்ளார்.

Update: 2019-08-25 22:30 GMT
மைசூரு, 

குமாரசாமி என்னை எதிரியாக மட்டும்தான் பார்த்தார் என்று சித்தராமையா கடுமையாக சாடி பேசியுள்ளார்.

குமாரசாமி ஆதங்கம்

கர்நாடகத்தில் நடந்து வந்த காங்கிரஸ் - ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் முதல்-மந்திரியாக குமாரசாமி இருந்து வந்தார். திடீரென கூட்டணி கட்சிகளில் இருந்து 15 எம்.எல்.ஏ.க்கள் தங்களுடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.

இந்த நிலையில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி ஆகியோர் காங்கிரசாரை விமர்சித்து வருகிறார்கள். நேற்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சித்தராமையாவை கடுமையாக தாக்கி பேசி பெங்களூருவில் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். மேலும், “கூட்டணி ஆட்சியில் நான் ஒரு கிளார்க் போலத்தான் செயல்பட்டேன்’ என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

ஒருங்கிணைப்பு குழு தலைவராக...

குமாரசாமியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா மைசூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கூட்டணி ஆட்சியில் குமாரசாமி என்னை விரோதியாகவே பார்த்தார். ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைத்து குமாரசாமியை முதல்-மந்திரி ஆக்கியது நாங்கள்தான். பா.ஜனதாவிற்கு ஆட்சியை விட்டுக் கொடுக்கக்கூடாது என்பதற்காக ராகுல்காந்தியுடன் பேசி ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைத்தோம். பின்னர் கூட்டணி ஆட்சியின் ஒருங்கிணைப்பு குழு தலைவராக என்னை நியமித்தனர்.

எதிரியாக பார்த்தார்

ஆனால் குமாரசாமி என்னை தலைவராகவும் பார்க்கவில்லை, நண்பராகவும் பார்க்கவில்லை. என்னை எதிரியாக மட்டுமேதான் பார்த்தார். குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்தபோது காங்கிரசாரின் கோரிக்கைகள், குறைகள் ஆகியவற்றை கேட்கவில்லை. அதனால்தான் அவர்கள் ராஜினாமா முடிவுக்கு வந்தனர். குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததற்கு காங்கிரசார் காரணம் அல்ல. அவரும், அவருடைய குடும்பத்தினரும்தான் காரணம்.

ஆட்சியில் பிரச்சினைகள் உருவானது அவர்களால்தான். கட்சிக்கு செய்த துரோகத்திற்காகத்தான் எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தோம். இது நானும், தினேஷ் குண்டுராவும் சேர்ந்து எடுத்த முடிவு. அவர்கள் மீண்டும் கட்சிக்கு வந்தால் எக்காரணத்தைக் கொண்டும் சேர்த்துக் கொள்ள மாட்டோம்.

மேலிட தலைவர்கள் நிராகரிப்பு

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளில் தேர்தல் நடந்தால் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். எடியூரப்பா பின்வாசல் வழியாக வந்து ஆட்சியை பிடித்துள்ளார். எடியூரப்பாவின் ஆட்சிக்காலம் நிலைக்காது. தற்போது மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டதில் இருந்து பா.ஜனதாவுக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. கூச்சல், குழப்பங்கள் அதிகமாகி உள்ளது.

எடியூரப்பா டெல்லிக்கு சென்று கட்சி மேலிட தலைவர்களை சந்திக்க காத்து கிடந்தாலும், அவரால் சந்திக்க முடியவில்லை. எடியூரப்பாவை சந்திப்பதை கட்சி மேலிட தலைவர்கள் நிராகரித்துவிட்டனர். கட்சி மேலிடத்தின் பிடி தளர்வதால் எடியூரப்பாவின் ஆட்சி நீண்ட காலம் நிலைக்காது.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

மேலும் செய்திகள்