யார், யாருக்கு கிடைக்கும் என்பது இன்று தெரியும் துணை முதல்-மந்திரி பதவியை உருவாக்க முடிவு எடியூரப்பா பேட்டி

துணை முதல்-மந்திரி பதவியை உருவாக்க முடிவு செய்துள்ளதாக எடியூரப்பா கூறினார். அந்த பதவி யார், யாருக்கு கிடைக்கும் என்று இன்று(திங்கட்கிழமை) தெரியும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2019-08-25 23:00 GMT
பெங்களூரு, 

துணை முதல்-மந்திரி பதவியை உருவாக்க முடிவு செய்துள்ளதாக எடியூரப்பா கூறினார். அந்த பதவி யார், யாருக்கு கிடைக்கும் என்று இன்று(திங்கட்கிழமை) தெரியும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

துணை முதல்-மந்திரி பதவி

கர்நாடகத்தில் எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா அரசு அமைந்துள்ளது. புதிதாக 17 மந்திரிகள் பதவி ஏற்றுள்ளனர். அவர்களுக்கு இன்னும் இலாகாக்கள் ஒதுக்கப்படவில்லை. மந்திரி பதவி கிடைக்காத சிலர் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த நிலையில் 3 பேருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்க பா.ஜனதா மேலிடம் ஆலோசித்து வருகிறது. இதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று மாலை டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எங்கள் கட்சியின் மேலிட ஆலோசனைப்படி லட்சுமண் சவதிக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டது. இதனால் கட்சியில் சிறிது அதிருப்தி ஏற்பட்டுள்ளது உண்மை தான். அதனால் பெலகாவி மாவட்டத்தை சேர்ந்த மேலும் ஒருவருக்கு மந்திரி பதவி வழங்க முடிவு செய்துள்ளேன்.

வாரிய தலைவர் பதவி

துணை முதல்-மந்திரி பதவியை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. யார்- யாருக்கு அந்த பதவி கிடைக்கும் என்பது நாளை (அதாவது இன்று) தெரியவரும். கர்நாடக மந்திரிசபை கூட்டம் விரைவில் நடக்கிறது. இதில் வெள்ள பாதிப்புகள் குறித்து மந்திரிகள் அளித்துள்ள அறிக்கை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

பூப்பந்து (பேட்மிண்டன்) போட்டியில் தங்க பதக்கம் வென்ற வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும். எங்கள் கட்சியில் எந்த பிரச்சினையும் இல்லை. காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளில் தான் பிரச்சினை உள்ளது. மந்திரி பதவி கிடைக்காமல் அதிருப்தியில் உள்ளவர்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்கப்படும்.

புதிய மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யும் பணி இன்று (அதாவது நேற்று) நிறைவடையும். இலாகா பட்டியல் தயாராக உள்ளது.

ஈடுசெய்ய முடியாத இழப்பு

மூத்த அரசியல்வாதி அருண்ஜெட்லி மரணம் அடைந்தது, நாட்டுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக பா.ஜனதாவுக்கும், அருண்ஜெட்லிக்கும் இடையே ஒரு சிறப்பான நல்லுறவு இருந்தது. அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நான் டெல்லிக்கு வந்தேன்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

அதைத்தொடர்ந்து கர்நாடக மந்திரி ஸ்ரீராமுலு கூறுகையில், “துணை முதல்-மந்திரி பதவி மீது எனக்கு தனிப்பட்ட முறையில் ஆசை இருக்கலாம். இதுபற்றி சமூக வலைத்தளத்தில் எனது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால் இந்த விஷயத்தில் கட்சி எடுக்கும் முடிவே இறுதியானது. கட்சியின் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்“ என்றார்.

மேலும் செய்திகள்