தியாகதுருகம் பகுதியில், குடிமராமத்து பணிகளை அதிகாரி ஆய்வு
தியாகதுருகம் பகுதியில் நடைபெற்று வரும் குடி மராமத்து பணிகளை அதிகாரி ஆய்வு செய்தார்.
கண்டாச்சிமங்கலம்,
தியாகதுருகம் ஒன்றியத்தில் உள்ள 24 ஏரிகள் மற்றும் 90 குளங்களை குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஆழப்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஏரி, குளங்களை ஆழப்படுத்தி, கரைகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் தியாகதுருகம் அருகே தென்னேரிகுப்பம், மேல்விழி, திம்மலை ஆகிய கிராமங்களில் உள்ள ஏரி, குளங்களில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குனர் முத்துமீனாள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம், ஏரியில் உள்ள மதகுகளை நல்ல முறையில் சீரமைக்க வேண்டும். மேலும் மழைக்காலங்களில் கரைகள் சேதமடையாத வகையில் நல்ல முறையில் கரையை பலப்படுத்த வேண்டும். மழைக்காலங்கள் தொடங்குவதற்கு முன்பு பணிகள் அனைத்தையும் முடிக்க வேண்டும்.
இதில் தவறுகள் ஏதும் நடந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த ஆய்வின்போது செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன், உதவி இயக்குனர்( ஊராட்சிகள்) ரெத்தினமாலா, பெரியமாம்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அய்யப்பா, உதவி செயற்பொறியாளர் பன்னீர்செல்வம், இளங்கோவன், புஷ்பராஜ் , வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணி, உதவி பொறியாளர்கள் அசோக் காந்த், கோமதி, ஜெயந்தி உள்பட பலர் உடன் இருந்தனர்.