அங்கன்வாடி ஊழியர்-உதவியாளர்களை முழுநேர அரசு ஊழியராக அறிவித்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்

அங்கன்வாடி ஊழியர்- உதவியாளர்களை முழுநேர அரசு ஊழியராக அறிவித்து காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என்று பெரம்பலூரில் நடந்த அச்சங்கத்தின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2019-08-25 22:45 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர்- அரியலூர் மாவட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் 3-வது மாநாடு பெரம்பலூரில் நேற்று நடந்தது. இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சக்தி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் சுடர்மதி, பத்மாவதி, முத்துலட்சுமி, சுமதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டெய்சி சிறப்புரையாற்றினார். மேலும் சங்கத்தின் மாநில பொருளாளர் பாக்கியம், சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாநில துணை செயலாளர் ரத்தினமாலா, அழகர்சாமி, பெரம்பலூர் மாவட்ட தலைவர் அகஸ்டின், பொருளாளர் சிற்றம்பலம், சி.ஐ.டி.யு. ஆட்டோ சங்க பெரம்பலூர் மாவட்ட தலைவர் சண்முகம், செயலாளர் ரெங்கநாதன், சாலையோர மற்றும் விற்பனையாளர் சங்கத்தை சேர்ந்த ரெங்கராஜ் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மணிமேகலை ஆண்டறிக்கை வாசித்தார். கூட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.18 ஆயிரம் மாத ஊதியமாக அரசு வழங்கிட வேண்டும். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை முழுநேர அரசு ஊழியராக அறிவித்து காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரமும், பணிக்கொடை மொத்தமாக பணியாளர்களுக்கு ரூ.5 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்கிட வேண்டும்.

பதவி உயர்வு வழங்கிட வேண்டும்

அங்கன்வாடி திட்டத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை அரசு கைவிட வேண்டும். செல்போன் வழங்கிய பிறகு பதிவேடுகள் பராமரிக்க கட்டாயப்படுத்துவதை கைவிட வேண்டும். அங்கன்வாடி திட்டத்தில் அனைத்து துறைகளிலும் பதவி உயர்வு வழங்கிட வேண்டும். முதலாளிகளுக்கு சாதகமாக தொழிலாளர் சட்டங்களை திருத்தும் மசோதாக்களை மத்திய அரசு திரும்ப பெற்றிட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட நிர்வாகி மேனகா வரவேற்றார். முடிவில் பெரம்பலூர் ஒன்றிய தலைவர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்