வேலூர் சைதாப்பேட்டையில் சாலையோர குப்பைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
வேலூர் சைதாப்பேட்டை மெயின் பஜாரில் சாலையோரம் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேலூர்,
வேலூர் சைதாப்பேட்டை மெயின்பஜாரில் தங்கும் விடுதிகள், தனியார் மருத்துவமனை, வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், டீக்கடைகள், குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இங்குள்ள தங்கும் விடுதிகள், ஓட்டல்கள், கடைகளில் சேகரமாகும் குப்பைகள் மெயின்பஜார் சாலையோரம் கொட்டப்படுகிறது. அதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலைகளில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை சைதாப்பேட்டை மெயின்பஜார் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள், வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், சாலையோரங்களில் குப்பைகள் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. அதனால் இப்பகுதியை மிகவும் சிரமத்தோடு கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது. இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குப்பைகள் மூலம் தொற்றுநோய் வருகிறது. எனவே உடனடியாக குப்பைகளை அகற்ற வேண்டும். மேலும் இங்கு குப்பைகள் கொட்டாதவாறு மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
அதற்கு மாநகராட்சி அதிகாரிகள் குப்பைகளை உடனடியாக அள்ளுவதாகவும், இந்த இடத்தில் குப்பைகள் கொட்ட அனுமதிக்க மாட்டோம் என்றும் உறுதியளித்தனர். தொடர்ந்து அங்கு லாரி வரவழைக்கப்பட்டு குப்பை அள்ளும் பணி நடந்தது. அதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.