தாமலேரிமுத்தூரில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறை தீர்வு கூட்டம்: அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்பு
தாமலேரிமுத்தூரில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறை தீர்வு கூட்டம் அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் நடந்தது.
ஜோலார்பேட்டை,
ஜோலார்பேட்டையை அடுத்த தாமலேரிமுத்தூரில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறை தீர்வு கூட்டம் நடந்தது. வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம், திருப்பத்தூர் சப்-கலெக்டர் பிரியங்கா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பத்தூர் தாசில்தார் அனந்தகிருஷ்ணன் வரவேற்றார்.
முகாமில், கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், படித்த பட்டதாரிகளுக்கு சுய தொழில் தொடங்க கடன், குடிநீர், சுகாதாரம், கழிவுநீர் கால்வாய், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, விவசாய மானியம், விவசாய கருவிகள், ரூ.6 ஆயிரம் விவசாய ஊக்கத்தொகை, வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுமனை பட்டா, தெருவிளக்கு வசதி, பசுமை வீடு, தனிநபர் கழிப்பறை, புதிய தார்சாலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர்.
இதில் அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:-
பொதுமக்களிடம் இருந்து அனைத்துத்துறை சார்ந்த மனுக்கள் பெறப்பட்டு, தகுதி வாய்ந்த மனுக்கள் மீது வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தகுதி வாய்ந்த மனுகளுக்கும், தகுதி இல்லாத மனுக்களுக்கும் தபால் மூலம் மனுதாரர்களுக்கு உரிய பதில் வழங்கப்படும்.
மேலும் தகுதி இல்லாத மனுக்களுக்கு எந்த காரணத்திற்காக தவிர்க்கப்படும் என்ற தகவலும் மனுதாரருக்கு தெரிவிக்கப்படும். மனுக்களானது துறை சார்ந்த அதிகாரிகள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது முதியோர் உதவித் தொகை கேட்டு அதிகளவில் மனுக்கள் தரப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை தருவதாக முதல்-அமைச்சர் தெரிவித்து இருக்கிறார்.
எனவே முதியோர் உதவித்தொகைக்கு விண்ணப்பம் செய்பவர்கள் ஆண் வாரிசு இல்லாமல், வீடு வாசல் மற்றும் வசதியற்றவராக இருக்க வேண்டும். தற்போதுள்ள அரசு நிதி பற்றாக்குறையாக இருந்தாலும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர்கள் கே.சி.அழகிரி, ஆர்.ரமேஷ், முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ், பாச்சல் ஆர்.மணிகண்டன், மாவட்ட பிரதிநிதி ஜெய்கிருஷ்ணன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ராமசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் தனி தாசில்தார் பாக்கியலட்சுமி நன்றி கூறினார்.
கே.வி.குப்பத்தில் தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்ட முகாம் நடைபெற்றது. வட்ட வழங்கல் அலுவலர் தேவராஜ் தலைமை தாங்கினார். ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் கே.எம்.ஐ.சீனிவாசன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ரமேஷ்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாரிபிரபு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் கே.வி.குப்பம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஜி.லோகநாதன் கலந்து கொண்டு 110 நபர்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். மனுக்கள் மீது அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அவர் அறிவுறுத்தினார்.
இதில் கூட்டுறவு சங்க தலைவர் ரோஸ்மேரி, சிவானந்தம், மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் தாலுகா ஆதியூர், மொளகரம்பட்டி, மண்டலநாயனகுண்டா, சின்னகந்திலி ஆகிய ஊராட்சிகளில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. தாசில்தார் அனந்தகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வட்ட வழங்கல் அலுவலர் காஞ்சனா முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர்கள் ராமன், தணிகாசலம் ஆகியோர் வரவேற்றனர்.
பொதுமக்களிடம் இருந்து குடிநீர் பிரச்சினை, முதியோர் உதவித்தொகை, மருத்துவ சேவை, சாலை வசதி, ஏரிகள், கால்வாய்கள் தூர்வாருதல், போக்குவரத்து வசதி, தார்சாலை விரிவாக்கம் என ஒவ்வொரு ஊராட்சிகளிலும் பல்வேறு மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் அனைத்தும் 30 நாட்களுக்குள் முழுமையான விசாரணை செய்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.
கூட்டத்தில் உதவி வேளாண்மை அலுவலர் கோவிந்தராஜ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, கிராம நிர்வாக அலுவலர் சுந்தரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் நன்றி கூறினார்.