பெத்தநாயக்கன்பாளையம் அருகே ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

பெத்தநாயக்கன் பாளையம் அருகே ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2019-08-24 22:15 GMT
பெத்தநாயக்கன்பாளையம்,

சேலம் மாவட்டம் பெத்த நாயக்கன்பாளையம் அருகே உள்ள பெரிய கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் அங்கமுத்து (வயது 50). பா.ம.க. பிரமுகர். இவரது மனைவி சாந்தி (45). இவர் பெரிய கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவராவார். இவர்களது மூத்த மகன் சரண்குமார் (13). இவன் மேட்டுடையார்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.

இவர்களது வீட்டுக்கு அருகில் வசித்து வருபவர் வெங்கடாசலம், தொழிலாளி. இவருடைய மனைவி லதா. இவர்களது மகன் தருனேஷ் (11). இவன் வைத்தியகவுண்டன்புதூரில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் நண்பர்களான சரண்குமார், தருனேஷ் ஆகியோர் வைத்தியகவுண்டன்புதூர் எல்லையில் உள்ள ஏரிக்கு விளையாடுவதற்காக சைக்கிளில் சென்றுள்ளனர்.

மேலும் அங்கு வறண்டு கிடந்த ஏரியில் தற்போது பெய்த மழை காரணமாக தண்ணீர் தேங்கி நின்றது. இதனிடையே அங்கு சென்ற மாணவர்கள் 2 பேரும் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக 2 பேரும் ஏரி தண்ணீரில் தவறி விழுந்தனர். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் காப்பாற்றுவதற்கு யாரும் வரவில்லை. இதில் சரண்குமார், தருனேஷ் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனிடையே மகன்களை காணாததால் அவர்களது பெற்றோர்களும், உறவினர்களும் தேடினார்கள். அப்போது ஏரிக்கு அருகில் சைக்கிள் நின்றது. உடனே அவர்கள் சந்தேகம் அடைந்து ஏரியில் இறங்கி பார்த்தனர். அதில் 2 பேரின் உடல்களும் கிடந்தன. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்களும், உறவினர்களும் கதறி அழுதனர்.

இது குறித்து தகவல் அறிந்த பெத்தநாயக்கன்பாளையம் தாசில்தார் அன்புக்கரசி மற்றும் வருவாய்த்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் ஏத்தாப்பூர் போலீசார் பலியான மாணவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரிய கிருஷ்ணாபுரம் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்