மாவட்டத்தில், உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் - மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி பங்கேற்பு

கடலூர் மாவட்ட உள்ளாட்சி தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து நடந்த ஆய்வுக்கூட்டத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி பங்கேற்றார்.

Update: 2019-08-24 22:00 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து ஊரக பகுதிக்கு 2 ஆயிரத்து 883 வாக்குச்சாவடிகளும், நகராட்சிக்கு 359 வாக்குச்சாவடிகளும், பேரூராட்சிக்கு 296 வாக்குச்சாவடிகளும் அமைத்து வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகள் அனைத்திலும் அடிப்படை வசதியான குடிநீர், கழிவறை வசதி, மின்சாரம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம் ஆகியவை அனைத்தும் உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

இதற்காக ஊரக பகுதிக்கு உதவி இயக்குனர் நிலையில் உள்ள மண்டல அலுவலர்கள் மற்றும் நகர்ப்புறத்திற்கு உதவி இயக்குனர்(பேரூராட்சிகள்), பேரூராட்சி செயலாளர்கள், நகராட்சி ஆணையர்கள் ஆகியோர் ஆய்வு செய்து இறுதி அறிக்கையை கலெக்டரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பட்டியல் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இப்பணியானது கடலூர் மாவட்டத்தில் முடியும் தருவாயில் உள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கான ஊரக மற்றும் நகர்ப்புற தேர்தல்களில் பயன்படுத்தப்பட உள்ள படிவங்கள், கையேடுகள் மற்றும் எழுது பொருட்கள் ஆகியவை இருப்பு உள்ள விவரத்தினை உறுதி செய்து தேவையான படிவங்கள் கையேடுகள் மற்றும் எழுது பொருட்கள் தேவை குறித்து ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

நகர்ப்புற தேர்தலுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரமும், ஊரகப்புற தேர்தலுக்கு வாக்குச்சீட்டு முறையும் பயன்படுத்தப்பட உள்ளதால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் தேவை குறித்தும், வாக்குச்சீட்டு முறைக்கான தேவையான வாக்குப்பெட்டிகள் இருப்பு மற்றும் தேவை குறித்தும் அறிக்கை அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் இருப்பில் உள்ள அனைத்து வாக்குப் பெட்டிகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி கூறினார்.

தொடர்ந்து அண்ணாகிராமம் மற்றும் கடலூர் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள படிவங்கள் மற்றும் வாக்குப்பெட்டிகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து அவரிடம், உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெறும் என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் இப்போது எதுவும் சொல்ல முடியாது என்று பதில் அளித்தார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காஞ்சனா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ஆனந்தன், மகளிர் திட்ட உதவி இயக்குனர் விஜயகுமார் மற்றும் அனைத்து நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்